சேலம்: சேலம் அருகே சன்னியாசிகுண்டு பகுதியில் எரியாத தெருவிளக்கு மின் கம்பத்தில் தீப்பந்தத்தை ஏற்றி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அருகே உள்ள சன்னியாசிகுண்டு பகுதிக்கு உட்பட்ட காட்டுமரகொட்டை கிராமத்தில் கடந்த பல மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவியர்கள் இரவு நேரங்களில் அச்சத்துடன் அப்பகுதியில் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று, அலுவலர்களிடம் முறையிட்டு வந்தனர். ஆனால், உள்ளாட்சி அதிகாரிகள் தெருவிளக்கு எரிய வைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அலட்சியம் காட்டி வந்தனர்.
பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் தெருவிளக்கு பிரச்சினைக்கு ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதததைக் கண்டித்து, நேற்று இரவு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமரகொட்டை கிராமத்தில் தெருவிளக்கு எரியாமல் கைவிட்ட நிலையில், அனைத்து மின் கம்பத்திலும் தீப்பந்தத்தை ஏற்றி மக்களுக்கு வெளிச்சம் கொடுத்து, கைக்கொடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.