SRMU condemns centre plans giving Railway to private: திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தின் தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தின் தலைவர் ராஜாஸ்ரீதர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் செய்தியாளர்ளை சந்தித்து பேசியதாவது:
மத்திய அரசின் ரயில்வே துறை தனியார் மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை ரயில்வே ஊழியர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.யூ., சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.
இதையும் படியுங்கள்: அமைச்சர் வாகனத்திற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
அந்த வகையில் திருச்சியில் இன்று ரயில்வே ஊழியர்களிடம் மேற்கண்ட இரண்டு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசு ரயில்வே துறையை தனியார் மயமாக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறது. ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் கட்டணம் உயர்வது மட்டுமல்லாமல் தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்படும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிடுமாறு தொடர்ந்து எங்களுடைய சங்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரதமரும், ரயில்வே அமைச்சரும், ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது என்று பொய் சொல்லி வருகிறார்கள்.
விமானங்களை தனியாருக்கு விற்பனை செய்ததை போல் ரயில்களையும் தனியாருக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சியை எதிர்த்து தொடர்ந்து போராடி அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
கொரோனா காலத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
அண்மையில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தனியார் மூலம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவை மூலம் தனியாருக்கு நிறைய லாபம் கிடைத்தது. அப்படி லாபத்தின் ஒரு பங்கினை மத்திய அரசு ஏன் கேட்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
தனியார், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க தான் மத்திய அரசு செயல்படுகிறதா? ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெறும் ரயில் சேவையை தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் கோட்டச்செயலாளர் வீரசேகரன் மற்றும் நிர்வாகிகள் மணிவண்ணன், பழனிவேல், வெங்கடேஷ்குமார், சித்தரேசன், சிவகுமார், செல்வகுமார், வெங்கடேசன், டேனியல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil