திருவனந்தபுரம்: கேரள அரசின் 11 அவசர சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆரிப் முகமது கான் மறுத்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னரின் அதிகாரத்தை ரத்து செய்ய கேரள அரசு அவசர சட்டம் கொண்டுவர தீர்மானித்ததாக கூறப்படுகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கை அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் 11 அவசர சட்டத்திருத்த மசோதாக்களின் காலாவதியை நீட்டிப்பதற்காக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் அனுப்பப்பட்ட இந்த மசோதாக்களின் காலாவதி நேற்றுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நேற்று வரை கவர்னர் ஆரிப் முகமது கான் இந்த மசோதாக்களில் கையெழுத்திட வில்லை. தற்போது அவர் டெல்லியில் உள்ளார். அவர் அளித்த பேட்டியில்,‘‘அரசு அனுப்பும் மசோதாக்களை படித்துப் பார்க்காமல் ஒரே நாளில் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புதல் அளிக்க முடியாது. அதற்கு உரிய கால அவகாசம் வேண்டும். அனைத்து மசோதாக்களையும் ஒட்டுமொத்தமாக ஏன் அனுப்பினார்கள்’’என்றார். கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து 11 மசோதாக்களும் காலாவதியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.