உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் நேற்று முந்தினம் இரவு சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திர சிங் யாதவ் காரில் தனியாக பயணித்து க்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சரக்கு லாரி ஒன்று அவரின் கார் மீது மோதியது. மேலும், விபத்துக்குள்ளான காரை 500 மீட்டர் தூரம் இழுத்துச்சென்றிருக்கிறது. லாரி காரை இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவிவருகிறது.
காருக்குள் இருந்த சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் தேவேந்திர சிங் யாதவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்றாலும் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை சரக்கு லாரி ஓட்டுநரைக் கைது செய்திருக்கிறது.
விபத்து குறித்து காவல்துறையின் மணிப்பூர் எஸ்பி, கமலேஷ் தீட்சித், “விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.