மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்தநிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதாலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.