அலுவலகத்தில் வேலை செய்யும்போது தூங்கினால் மேலதிகாரி திட்டுவார் அல்லது சம்பளம் பிடித்தம் செய்வார் என்பதுதான் நடைமுறையாக உள்ளது.
எனவே அலுவலகத்தில் தூக்கம் வந்தாலும் தூக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டு பணிசெய்யும் ஊழியர்களை தான் நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் தூங்குபவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேலைக்கு ஆள் எடுத்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெத்தை நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்பர் என்ற மெத்தை தயாரிக்கும் நிறுவனம் நன்றாக தூங்கும் திறனுள்ள பணியாளர்களை வேலைக்கு தேடிவருகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் கூறியபோது எங்கள் கடைகளில் தயாரிக்கப்படும் மெத்தைகளில் தூங்கினால் எவ்வாறு தூக்கம் வருகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக தூங்குபவரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளோம் என்று கூறி உள்ளனர்.
தூங்குவதற்கு சம்பளம்
இந்த பணியில் சேர்பவர்கள் தொழில்முறை தூங்குபவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் தயாரிப்பு மெத்தைகளில் தூங்கினால் எவ்வாறு தூக்கம் வருகிறது, மெத்தையில் தூங்குவதன் மூலம் என்னென்ன சொகுசான அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதை பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக அவர்களுக்கு கைநிறைய சம்பளம் தரவும் காஸ்பர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
டிக்டாக் வீடியோ
சிறப்பாக தூங்குபவர்களை தங்கள் நிறுவனம் தேடி வருவதாகவும் இதற்காக நன்றாக தூங்குபவர்கள் தங்களுடைய திறனை டிக் டாக் வீடியோ மூலம் வெளிப்படுத்தி, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
இலவசம்
மேலும் தங்கள் நிறுவனத்தின் தூங்கும் வேலைக்கு வருபவர்களுக்கு பைஜாமா போன்ற இரவு நேர உடைகளை அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவை அனைத்தும் இலவசமாக தூங்கும் பணியாளர்களுக்கு தரப்படும் என்றும் தூக்க நேரத்திற்கான அட்டவணையும் அவர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் காஸ்பர் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆகஸ்ட் 11 கடைசி தேதி
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பதிவு செய்யலாம் என்றும் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஆகஸ்ட் 11ம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக் டாக் சமூக ஊடகத்தில் தூங்கும் திறனை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த வேலைக்கு பலர் போட்டி போட்டு விண்ணப்பித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கனவு காண சம்பளம்
பலருக்கு நல்ல வேலை என்பது ஒரு கனவாக இருக்கும் நிலையில், தூங்கி கொண்டு கனவு காண்பதற்கு சம்பளம் தரும் இந்த நிறுவனத்தின் அறிவிப்பு பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
This US company hiring people with ‘exceptional sleeping!
This US company hiring people with ‘exceptional sleeping! | தூங்குவதற்கு கைநிறைய சம்பளம் தரும் நிறுவனம்… போட்டி போட்டு விண்ணப்பம்!