சுயேச்சை மாநகராட்சி கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணைந்தார்…

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த லியோ சுந்தரம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற நிலையில்,  தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இதனால், மாநகராட்சியில் பாஜகவின் பலம் 2ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் தேர்தலுக்கு பாஜக தனித்துப் போட்டியிட்டது. சென்னையின் 134-வது வார்டில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். அதுபோல,   மாநகராட்சியின் 198-வது வார்டில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட லியோ சுந்தரம் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர். இந்த நிலையில்,   கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதையடுத்து சென்னை மாநகராட்சியில் பாஜக உறுப்பினர்களின் பலம் 2 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கவுன்சிலர் லியோ சுந்தரம் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கவுன்சிலர் லியோசுந்தரம் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லியோ சுந்தரத்துக்கு சால்வை அணிவித்து கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன், பாஜக இதர மொழி பிரிவின் மாநில தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய கவுன்சிலர் லியோ சுந்தரம், ‘தமிழக பாஜக தலைவர்அண்ணாமலையின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்துள்ளேன். வரும் காலங்களில் பாஜக மிகப் பெரிய வளர்ச்சிஅடையும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.