குரோம்பேட்டை ரயில்நிலையத்தை ஹஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை, திருமுடிவாக்கம், பழந்தண்டலம், திருநீர்மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நாள்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜி.எஸ்.டி சாலை நுழைவுபகுதிக்கு அருகே பிளாட்பார்ம் 1 A நடைமேடை ஒரு வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது. இதனால் மின்சார ரயில்கள் இரட்டை பிளாட்பாரத்தின் நன்மையைப் பெறுகின்றன.
பயணிகள் மின்சார ரயில்களில் ஒரு பெட்டியின் இருபுறமும் இறங்கலாம் அல்லது ஏறலாம். அதாவது 1A அல்லது 1 பிளாட்பாரத்தில் இருந்து. ரயில்களில் விரைவாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மற்றும் ஃபுட்ஓவர் பாலத்தின் நெரிசலைக் குறைக்கவும் இது உதவும். பிளாட்பாரம் 1A-ல், போதுமான எண்ணிக்கையிலான பெஞ்சுகள் உள்ளன. ஆனால் மேற்க்கூரை இல்லை. மழைக் காலங்களில், குரோம்பேட்டையில் உள்ள ஜி.எஸ்.டி சாலை மற்றும் ரயில்வே ஸ்டேஷன் சாலையை இணைக்கும் ஃபுட்-ஓவர் பாலத்தின் படிக்கட்டுக்கு அருகில் பயணிகள் தஞ்சம் அடைகின்றனர்.
இதனால் வெயில், மழை காலங்களில் மக்கள் அந்த நடைமேடையை தவிர்த்து பிளாட்பார்ம் 1-ஐ பயன்படுத்தி வருகின்றனர். குரோம்பேட்டை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் 1A பிளாட்பார்மில் இறங்கி தண்டவாளத்தின் வழியாக பிளாட்பார்ம் 1-க்கு ஆபத்தான முறையில் இறங்கி செல்கின்றனர். பள்ளி, கல்லூரி வேலை செல்வோர் என வயதுபேதமின்றி ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.
இதுகுறித்து பயணிகள் சிலரிடம் கேட்ட போது, “இப்போ கட்டிருவோம், அப்போ கட்டிருவோம்னு சொல்றாங்க ஆனா இன்னும் கட்டி முடிக்கிறதுக்கான எந்த அறிகுறியும் தெரியல. நாளிதழ்கள்ல கூட 2022 ஏப்ரல் மாதத்துக்குள்ள மேற்கூரை அமைக்கபட்டு கோடைக்காலங்களில் பயணிகளுக்கு வசதியா இருக்கும்னு தென்னிந்திய ரயில்வே சொன்னதா போட்டுருந்தாங்க. ஆனா ஒன்னும் நடக்கல. ஒரு மேற்கூரை அமைக்க ஏன் இத்தனை சிக்கல்னு தெரியல. மக்கள் பயன்பாட்டுக்கு, வசதிக்காக கட்டப்பட்ட பிளாட்பார்ம் மக்கள் பயன்படுத்தவே சிரமமாக இருப்பதை ரயில்வே நிர்வாகம் புரிஞ்சுக்கனும்!” என்றனர் ஆதங்கமாக.
இந்த பிரச்னை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கேட்ட போது, “இந்த பிளாட்பார்ம் கட்டுறாங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஈஸியா ட்ரெயின் ஏறிடலாம் அவசரத்துக்கு ஸ்டேசன் வர்றவங்க ட்ரெயினை மிஸ் பண்ணாம ஏறுவதற்கு வாய்ப்பா இருக்கும்னு நினைச்சோம். ஆனா இப்போ வரைக்கும் மேற்கூரை இல்ல. மழை டைம்ல நிக்கவே முடியாது. பேக்லாம் நனைஞ்சிரும்னு நாங்க போய் ஃபுட்-ஓவர் பக்கம் உள்ள தண்டவாளம் வழியா இறங்கி 1 பிளாட்பார்ம் போயிருவோம். சில சமயம் ட்ரெயினையும் மிஸ் பண்ணிருவோம்” என்றனர் வேதனையாக.
இயங்குதளம் 1A -ல் உள்ள மற்றொரு சிக்கல் என்னவென்றால், அது வெளிச்சம் இல்லை. இதனால், பெண்கள் நடைமேடை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் மேற்கூரையில்லாமல் மக்கள் அவதிபடும் நிலை கவலைக்குரியது. தென்னகவே ரயில்வே மேற்கூரை மற்றும் மின் விளக்குககள் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து பயணிகளின் கோரிக்கை.
-இ. சுந்தர வடிவேல் (மாணவ பத்திரிகையாளர்)