"தியேட்டர் வச்சிருக்கிற நானே ‘வடசென்னை 2’ வந்தா எதிர்ப்பேன்!"– தி.மு.க எம்.எல்.ஏ ‘ஐ ட்ரீம்’ மூர்த்தி

வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியில் 2018-ம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் அன்பு என்ற கேரக்டரில் நடித்திருந்தார் தனுஷ். படம் பெரிய ஹிட். எனவே ’இந்தப் படத்தின் பார்ட் 2 எப்போது?’ என்கிற கேள்வி அப்போதே எழத் தொடங்கியது. தற்போது ’வடசென்னை 2’-வுக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.

சமீபத்தில் சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறனிடம், இது தொடர்பாகக் கேட்டதற்கு, “‘விடுதலை’ மற்றும் சூர்யாவின் ‘வாடிவாசல்’ வேலைகள் முடிவடைந்ததும் ‘வடசென்னை 2′ தொடங்க உள்ளேன்’” என்றார்.

இந்தச் சூழலில்தான் இந்தப் படத்தை வைத்து சர்ச்சைகளும் கிளம்பி இருக்கின்றன.

வடசென்னை

‘வடசென்னைத் தமிழ்ச்சங்கம்’ என்கிற அமைப்பின் தலைவர் எ.த.இளங்கோ ‘வடசென்னை 2 ‘ படம் தொடர்பாக தனது கண்டனக் குரலைப் பதிவு செய்துள்ளார். அவரிடம் பேசினோம்.

“சினிமா எடுக்கிறது படைப்பாளியின் சுதந்திரம். அதுல யாரும் தலையிடக் கூடாதுதான். ஆனா காலங்காலமா வடசென்னைன்னு படத்துல காமிச்சாலே, போக்குவரத்து நெருக்கடி, குடிசை வீடுகள், அழுக்கு ரோடு, குற்றங்கள் செய்கிற மனிதர்கள்தான் அங்க இருப்பாங்கன்னே காட்டிட்டு வர்றாங்க. எல்லா ஊர்கள்லயும் நல்லவங்களும் இருக்காங்க, கெட்டவங்களும் இருக்காங்க.

சென்னையின் பூர்வ குடிமக்கள் வசிக்கிற இந்தப் பகுதி முன்னேறாம இருக்குதுன்னா அது இதுவரை ஆண்ட அரசாங்கங்களின் தப்பு. அவங்கதான் திட்டங்களைக் கொண்டு வந்து மாத்தியிருக்கணும்.

மேலும், 25 வருஷத்துக்கு முன்னாடி இருந்த நிலை இன்னைக்கு வடசென்னையில் இல்லை. இங்க இருந்தும் இளைஞர்கள் படிச்சு முன்னேறி பெரிய வேலைகளுக்குப் போகத் தொடங்கிட்டாங்க. இந்தப் பாசிட்டிவான விஷயத்தைப் பேசலாம். அதை விட்டுட்டு, வடசென்னைன்னாலே ரௌடியிசம்தான் இருக்கும்ன்னு இன்னும் சொல்றதை ஏத்துக்க முடியாது.

இன்னைக்கும் எங்க பசங்க ஐ.டி.கம்பெனி வேலைக்குப் போனா, ‘வடசென்னை’ன்னு சொன்னா ஒரு மாதிரி பார்க்கறதெல்லாம் நடக்குது. இந்தச் சூழல்ல சினிமா தொடர்ந்து எங்களை இப்படியே காமிச்சிட்டிருந்தா எப்படிங்க?

எ.த.இளங்கோ

அதனால்தான் வெற்றிமாறன் ‘வடசென்னை’ எடுத்தப்ப எங்க வருத்தத்தைத் தெரிவிச்சு இனிமே இப்படிப் பண்ணாதீங்க சார்’ன்னு நேரிலேயே போய் கேட்டுக்கிட்டோம். ‘வடசென்னை’னு டைட்டில்ல வச்சதுதான் எங்களை ரொம்பவே காயப்படுத்துச்சு.

இப்பவும் அவருடைய படத்தின் கதையிலெல்லாம் நாங்க தலையிடலை. அது அவர் படைப்புரிமை. ஆனா ‘டைட்டில் ’வட சென்னை 2’ன்னு வைக்கக் கூடாது. டைட்டில் ரொம்பப் பேரை சென்று ரீச் ஆகிடுதுங்கிறதாலதான் இந்த எதிர்ப்பு. வேற பேரை வச்சுட்டு நீங்க என்ன வேணாலும் சொல்லிட்டுப் போங்கன்னுதான் சொல்றோம். அவர் கவனத்துக்கு எங்க கோரிக்கையைக் கொண்டு போயாச்சு. இனி அவர்தான் முடிவு எடுக்கணும். ஒருவேளை இதையும் தாண்டி ‘வடசென்னை 2’ன்னு படம் வெளிவரும்னா எங்க மக்களைத் திரட்டி பெரிய அளவிலான போராட்டத்தையும் நடத்தத் தயாராகவே இருக்கோம்” என்கிறார் எ.த.இளங்கோ.

வடசென்னையின் ராயபுரத்தில் புகழ்பெற்ற திரையரங்குகளை நடத்தி வருபவரும், தற்போது ராயபுரம் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கும் திமுகவைச் சேர்ந்த ‘ஐ ட்ரீம்’ மூர்த்தியும் ‘வடசென்னை’ வெளியான போது தன்னுடைய வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். அவரிடமும் பேசினோம்.

‘’நானே தியேட்டர் வச்சிருக்கேன். எங்க தியேட்டர்லயே ‘வடசென்னை’ ஹவுஸ்ஃபுல்லா ஓடுச்சு. ஆனாலும் என்னுடைய வருத்தத்தை அன்னைக்கே பதிவு செய்தேன். படத்தின் தலைப்புதான் பிரச்னை. ஒரு அடையாளத்தை இந்தப் பகுதி மக்களின் மீது திணிக்கிற அந்த டைட்டிலைத் தவிர்த்து விடலாம்கிறதுதான் என்னுடைய கருத்தும்.

ஐ ட்ரீம் மூர்த்தி

’வடசென்னை 2’ என்ன கதை, எப்படிச் சொல்லப் போறார்ன்னு யாருக்கும் எதுவும் தெரியாது.

அதேநேரம் வெற்றி மாறனிடம், ‘முன்னாடி பண்ணின மாதிரி மீண்டும் இந்தப் பகுதி மக்கள் மனசைக் காயப்படுத்திடாதிங்க’ங்கிறதை மட்டும் கோரிக்கையா வைக்க விரும்பறேன்.

ஒருவேளை ’இவங்க இப்படித்தான் இருப்பாங்க’ன்னு நினைக்க வைக்கிற மாதிரி, அதே தலைப்புதான் மறுபடியும் படம் வருதுன்னா, தியேட்டர் வச்சிருக்கிற நானே படத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத்தான் தள்ளப்படுவேன்” என்கிறார் அவர்.

இந்தச் சர்ச்சை குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.