முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் உயரும் போதெல்லாம் அணை உடைந்துவிடும் என கேரளாவில் வதந்தி பரப்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த வாரம் அணை பலவீனமாக இருப்பதாக ஆல்பம் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் கிராஃபிக்ஸ் மூலம் அணை உடைவது போல காட்சிகள் உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ்பாபு, கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கத் தலைவர் கொடியரசன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கச் செயலாளர் சிவனாண்டி மற்றும் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
இம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கெட்டு என்ற ஆல்பம் பாடல் கேரளாவில் சாசா மீடியா ஷப் நிறுவனம் சார்பில் கடந்த ஆக.3-ம் தேதி வெளியிடப்பட்டது காலடி என்ற ஊரைச் சேர்ந்த ஆஸ்லின், ராஜன், சோமசுந்தரம் உள்ளிட்ட 13 பேர் இதை வெளியிட்டுள்ளனர். இதில் முல்லை பெரியாறு அணை குறித்து வீண் வதந்தியுடன், பீதியைக் கிளப்பும் வகையில் காட்சிகள் உள்ளன.
இருமாநில நல்லுறவைக் கெடுக்கும் நோக்கிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவும் இப்பாடல் உள்ளது. இதனைக் கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். தாமதமின்றி இப்பாடலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.