மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலையில் நடந்து சென்ற பாகுபலி காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி நெடுஞ்சாலை வழியே பாகுபலி என்றழைக்கப்படும் ஒற்றை காட்டுயானை உலா வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல மாதங்களாக ஒற்றை ஆண் காட்டுயானை ஒன்று சுற்றி வருகிறது. இதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத் துறையினர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த யானையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்றிரவு பாகுபலி யானை போக்குவரத்து மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வரத் துவங்கியது. பாகுபலி யானையை அடிக்கடி காண்பதால், அவ்வழியே பயணித்த வாகன ஓட்டிகள் பதற்றமடைந்தனர். அச்சத்தில் வாகன ஓட்டிள் சிலர் ஹாரனை அடித்தபடி கடந்து செல்ல முற்பட்டனர். இதனால் ஆவேசமான பாகுபலி யானை சாலையோரம் இருந்த ஒரு தோட்டத்து இரும்புக் கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாகுபலி யானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
குடியிருப்பு பகுதிகள், விவசாய தோட்டங்கள் மற்றும் போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள் என இந்த காட்டு யானை உலா வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வனத்துறையினர் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவது அவசியம் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM