ஐ.எஃப்.எஸ் மோசடி: காவல்துறை நடவடிக்க எடுக்காமல் இருந்ததற்கு அரசியல்வாதிகள்தான் காரணமா?

ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பான 21 இடங்களில் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிரடி ரெய்டு நடத்தியதில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியுள்ளன. கிட்டத்தட்ட ரூ.4,883 கோடி பணம் இந்த நிறுவனத்தில் மக்கள் போட்டிருப்பார்கள் என்று சொல்லி இருக்கிறார் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு. இந்த நிலையில், காட்பாடி சேவூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் குறித்து இப்படி வரும் செய்திகள் எல்லாம் ஓர் ஆரம்பம்தான். இந்த மெகா மோசடியில் நடந்த பல விஷயங்கள் இனிமேல்தான் வெளிச்சத்துக்கு வரப் போகிறது. அந்த உண்மைகள் வெளிவரும்பட்சத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து அகில இந்தியாவையே அதிர வைத்த சாரதா சிட் ஃபண்ட் திட்டம் போல மிகப் பெரிதாக இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஐ.எஃப்.எஸ் சகோதரர்கள்

அவர்கள் அப்படி சொல்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பொதுவாக, மோசடித் திட்டங்கள் நடப்பது தமிழகத்தில் புதிதில்லை. 90-களில் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவாக சொல்லி, மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடியைச் சுருட்டின. 60 வயதைத் தாண்டியவர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்கென வைத்திருந்த பணத்தை அதிக வட்டிக்காக ஆசைப்பட்டு, பல பெனிஃபிட் கம்பெனிகள் போட, சில மாதங்களுக்கு மட்டும் பணம் தந்துவிட்டு, கம்பியை நீட்டின அந்த நிறுவனங்கள்.

அதன்பிறகு நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல், காதும் காதும் வைத்த மாதிரி செயல்படத் தொடங்கின. பி.ஏ.சி.எல் என்கிற நிறுவனம் நிலத்தில் முதலீடு செய்வதாக மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடியை வசூலித்து ஏப்பம் விட்டது. அதற்குப் பிறகு தமிழகத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் மாதந்தோறும் 8% அல்லது 10% லாபம் தருவோம் என்று மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பித்தன. மதுரையில் இருந்து செயல்பட்ட எம்.ஆர்.டி.டி நிறுவனம், திருச்சியில் இருந்து செயல்பட்ட செந்தூர் ஃபின்கார்ப், எல்ஃபின், கோவையில் இருந்து செயல்பட்ட யு.டி.எஸ், நெல்லையில் இருந்து செயல்பட்ட சி.டி.எஸ் என பல மோசடி நிறுவனங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் கைவரிசையைக் காட்டின.

இந்த நிறுவனங்களில் மக்கள் எவ்வளவு பணத்தைப் போட்டனர், இந்த நிறுவனத்தை நடத்தியவர்களிடம் இருந்து எவ்வளவு பணம் மீட்கப்பட்டது, பணத்தை இழந்தவர்களுக்கு எவ்வளவு பணம் திரும்பக் கிடைத்தது என்பது பற்றி எல்லாம் எந்தத் தகவலும் காவல் துறையிடம் இருந்து வெளியிடப்படவில்லை. பணம் போட்ட மக்களே காவல் துறையில் புகார் எதுவும் செய்யாததால், இந்த மோசடி நிறுவனங்களை நடத்தியவர்கள் எந்த சிக்கலும் இல்லாமல் தப்பித்து விட்டார்கள்.

ஐ.எஃப்.எஸ் – வினோத்குமார்

இப்போது ஐ.எஃப்.எஸ் விஷயத்தில் இதே மாதிரி நடக்கும் என்றே விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளைக் குறிவைப்பதாகவே இருக்கிறது.

பொதுவாக, இது மாதிரியான மோசடித் திட்டங்களை ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அந்த நிறுவனத்தில் அப்பிராணி மக்கள் பணம் போட்டு, பிற்பாடு இழப்பார்கள். ஆனால், இதுவரை நடந்த மோசடிகளுக்கும் ஐ.எஃப்.எஸ் மோசடிக்கும் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை மிக கவனமாக கவனித்து வந்தவர்கள். அந்த வித்தியாசம், அரசியல்வாதிகள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளை அடித்ததுதான். பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பல நூறு கோடியை இந்தத் திட்டத்தில் போட்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு பணம் போடலாம்? அரசியல்வாதிகள் ஏன் பணம் போட்டார்கள்?

இன்றைக்கு அரசியல்வாதிகளிடம்தான் கணக்கில் காட்டமுடியாத அளவுக்குப் பணம் இருக்கிறது. கறுப்புப் பணமாக இருக்கும் இந்தப் பணத்தை ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் போடுவதன் மூலம் ஏகப்பட்ட லாபம் கிடைக்கும் என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே ஐ.எஃப்.எஸ் நிறுவனம் நடந்து வந்தாலும், 2020-ல்தான் வேகமெடுக்கத் தொடங்கியது. பங்குச் சந்தையில் பணம் போட்டு பெரும் லாபம் சம்பாதித்துத் தருகிறோம் என்கிற பச்சைப் பொய்யைச் சொல்லி பணம் வாங்க ஆரம்பித்தது. ஆனால், இந்த நிறுவனம் பங்குச் சந்தையில் எல்லாம் பணம் போடவில்லை. மற்றவர்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எடுத்து அவர்களுக்கே தந்து ஏமாற்றியது. இந்த உண்மையைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களிடம் இருந்த கறுப்புப்பணத்தை இந்த நிறுவனத்தில் இறக்கினர். இதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.

‘‘கொரோனா நோய்த் தொற்றுவந்த ஒரு வருட காலத்தில் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் சாதாரண மக்களிடம் இருந்துதான் பணம் வாங்கியது. முந்தைய ஆட்சியில் இருந்தவர்களும் இந்த நிறுவனத்தில் பணம் போட்டதும் உண்மைதான். ஆனால், சட்டமன்றத் தேர்தல் நடந்து, தமிழகத்தில் ஆட்சி மாறியபிறகுதான், இந்த நிறுவனம் படுசுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்தது. அதற்குப்பிறகு இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடானது. அரசியல்வாதிகளே முதலீடு செய்வதைப் பார்த்து, கறுப்புப்பணம் வைத்திருக்கும் பலரும் பணம் போட ஆரம்பித்தனர்.

கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்!

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி தமிழக அரசுத் தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு முக்கியமான காரணம், அரசியல்வாதிகள் பலரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்ததுதான். இந்த நிறுவனம் பற்றி தமிழக அரசாங்கத்திற்குத் தகவல் போயிருக்கிறது. ஆனால், இந்த நிறுவனத்தின்மீது கைவைத்தால், அரசியல்வாதிகளைப் பகைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் பற்றி 06/07/2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரை வெளியானது. அப்போதே தமிழக அரசாங்கம் இந்த நிறுவனம் பற்றி விசாரிக்கத் தொடங்கவில்லை, இந்த நிறுவனத்தை நடத்திவந்த லட்சுமி நாராயணன் சுந்தரம், ஜனார்த்தனர், வேதநாராயணன், மோகன் பாபு ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க ஏன் உத்தரவிடவில்லை? கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து அதாவது 05/08/2022 அன்றுதான் இந்த நிறுவனத்தின் மீது ரெய்டு நடவடிக்கை எடுக்க பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசாங்கம்.

இந்த ஒரு மாத காலத்துக்குள் அரசியல்வாதிகள் போட்ட பணம் அத்தனையும் அவர்களுக்குத் திரும்பத் தரும் வேலை கமுக்கமாக சுமுகமாக நடந்தன. கறுப்புப்பண அரசியல்வாதிகள் ஐ.எஃப்.எஸ்-ல் பணம் போட்டு பணத்துக்கு ஒன்றுக்கு மூன்று மடங்காக திரும்பக் கிடைத்தது. ஐ.எஃப்.எஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்குக் காலதாமதமானதுக்கு முக்கியமான காரணம் இதுதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, காவல் துறையும் ஐ.எஃப்.எஸ் விஷயத்தில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதும் இதில் பணம் போட்டவர் பலரது குற்றச்சாட்டு. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி காவல் துறைக்கு தெரியவே தெரியாது என்பதெல்லாம் பச்சைப் பொய். காரணம், காவல் துறை உயரதிகாரிகள் பலரும் இந்த நிறுவனத்தில் பணம் போட்டிருக்கின்றனர்.

வேலூரைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் ரூ.3 கோடி வரை பணம் போட்டதாக சொல்லபடுகிறது. இவர் இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டதன் விளைவாக, அவர் இன்றைக்கு காவல் துறையில் காத்திருப்புப் பணிக்கு உள்ளாகி இருப்பதாக காவல் துறை வட்டாரத்தினர் சொல்கின்றனர்.

போலீஸ்

வேலூர் எஸ்.பி. அலுவலகத்தை சேர்ந்த ஒருவர் அந்த வேலையை விட்டுவிட்டு, ரூ.900 கோடி அளவுக்கு ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் மக்களிடம் இருந்து வசூலித்துத் தந்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். இந்த நிறுவனம் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்பதால், விசாரித்து, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது காவல் துறையின் வாதமாக இருக்கிறது. ஆனால், ஜூ.வி.யில் இந்த நிறுவனம் பற்றி கட்டுரை வந்தபின்பும் இந்த நிறுவனத்தின் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககாமல் இருந்தது ஏன்? தவிர, 20 நாள்களுக்குமுன்பே கோனேரிக் குப்பத்தைச் சேர்ந்த சிலர் காஞ்சிபுரம் அலுவலகத்தில் தந்த புகாரே சரியாக விசாரிக்காமல் அலைகழிக்கப்பட்டு வருகிறார்கள்.

பணம் போட்டவர்கள் அத்தனை பேரும் பரிதவித்துக்கொண்டிருக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்புதான், பொருளாதாரக் குற்றப் பிரிவை ஏவிவிட்டிருக்கிறது காவல் துறை. நீதிமன்றம் இப்படி உத்தரவிடாமல் போயிருந்தால், ஐ.எஃப்.எஸ் மீது ரெய்டு நடவடிக்கை வந்திருக்குமா என்பதே சந்தேகமே.

ஐ.எஃப்.எஸ் மீது கடந்த ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது நிறுவனத்தை நடத்தியவர்கள் ஊரை விட்டு ஓடிப் போனபின்பு, அந்த நிறுவனத்தின் அலுவலகம் மீது ரெய்டு செய்து என்ன பிரயோஜனம்? திருடன் பாதுகாப்பாக வெளியேறும் வரை அமைதியாக இருந்துவிட்டு, அதன்பிறகு இது மாதிரியான மோசடி நிறுவனத்தில் பணம் போடாதீர்கள் என்று சொல்வதுதான் காவல் துறைக்கு அழகா?

எல்லாக் குற்றமும் நடந்துமுடிந்த பிறகு போலீஸ் வரும் என்று தமிழ் சினிமா படங்களில் கிண்டலடிக்கும் காட்சி வரும். அது பொய் இல்லை, உண்மைதான் என்று தமிழகக் காவல் துறை நிருபிக்கிற மாதிரி அல்லவா செயல்பட்டிருக்கிறது.

ஐ.எஃப்.எஸ் – லட்சுமி நாராயணன் சுந்தரம்

காவல் துறையின் நடவடிக்கை இப்படி இருந்தால், இது மாதிரியான மோசடி நிறுவனங்களின் செயல்பாடுகளை எப்படித் தடுக்கும், மக்களின் பணத்துக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்கும்? இது மாதிரி மோசடி நிறுவனங்களில் மக்கள் பணம் போடக்கூடாது என்று காவல் துறை சொல்வது சரிதான். ஆனால், இது மாதிரியான மோசடி நிறுவனங்கள் செயல்படாமல் தடுத்து நிறுத்த காவல் துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’’ என்று கேட்கிறார்கள் பணத்தை இழந்த மக்கள்.

ஐ.எஃப்.எஸ் மோசடித் திட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் காவல் துறையினர் திரைமறைவில் இருந்து செயல்பட்டிருக்கின்றனர். இல்லாவிட்டால், இப்படி ஒரு மாபெரும் மோசடி நடந்திருக்கவே நடந்திருக்காது என்பதுதான் மக்களின் கருத்து. இந்த நிறுவனத்தில் மக்கள் போட்ட பணத்தைத் திரும்பத் தருவதும், இது மாதிரியான மோசடி நிறுவனங்கள் தமிழகத்தில் இனி நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் அரசியல்வாதிகளும், காவல் துறையும் தங்கள் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை நிருபிக்க முடியும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.