மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைத்து, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைத்தார். கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றனர்.

அரசு அமைந்து 40 நாட்கள் ஆன நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையாக விமர்சித்து வந்தன. இதை அடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக, கடந்த சில நாட்களாக, டெல்லியில் முகாமிட்ட ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர், பாஜக மூத்தத் தலைவர்களிடம் ஒப்புதல் வாங்கினர்.

இந்நிலையில், தலைநகர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக சார்பில், 9 எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தரப்பில் 9 எம்எல்ஏக்கள் என, மொத்தம் 18 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக சார்பில், சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கண்டிவார், கிரிஷ் மகாஜன், சுரேஷ் காடே, ராதா கிருஷ்ண விகே பாட்டீல், ரவீந்திர சாவான், மங்கள் பிரபாத் லோதா, விஜய்குமார் காவிட், அதுல் சேவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

ஏக்நாத் ஷிண்டே தரப்பில், தாதா பூசே, சந்தீபன் பும்ரே, உதய் சமந்த், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார், தீபக் கேசர்கர், குலாப்ராவ் பாட்டீல், சஞ்சய் ரத்தோட், ஷம்புராஜே தேசாய் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். விரைவில், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்த பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசுக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.