யுவாங் வாங் 5 என்ற சீனக் கப்பலின் சமீபத்திய முன்னேற்றங்கள்

2022 ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக துறைமுக விஜயத்தை மேற்கொள்வதற்கான இராஜதந்திர அனுமதி, கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு 2022 ஜூலை 12ஆந் திகதி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேலதிக ஆலோசனைகளின் தேவை காரணமாக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்வதை ஒத்திவைக்குமாறு அமைச்சு கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.

2022 ஆகஸ்ட் 04ஆந் திகதி ஃபோன்ம் பென் கம்போடியாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் வாங் யீ ஆகியோரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டபடி, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீடித்த நட்பு மற்றும் சிறந்த உறவுகளை உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விரும்புகின்றது. இரண்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களுக்குமிடையிலான இந்த முதலாவது சந்திப்பில், நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் நிலையான கோட்பாடாக இருக்கும் ஒரே சீனா கொள்கைக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பை அமைச்சர் சப்ரி குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஆகஸ்ட் 08

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.