பீகாரில் பாஜக கூட்டணி முறிவு: நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் பகு சௌஹானை சந்தித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச உள்ளார். அப்போது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 74 இடங்களும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 இடங்களும் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இடது சாரிகள் 12 இடங்களில் வெற்றனர்.

மாநிலத்திலேயே அதிமான இடங்களை ஆர்ஜேடி கைப்பற்றினாலும் கூட்டணியில் மற்ற கட்சிகள் பெரியளவில் வெற்றி பெறாததால் பாஜக – ஐக்கிய தனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. நிதிஷ்குமார் முதலவரானார். ஆனால் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் இடையே ஏகப்பட்ட கருத்து மோதல்கள் உருவாகி வந்தன. இதனால் ஆட்சியிலிருக்கும் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி உண்டானது.

ஒருகட்டத்தில் தனது கட்சி மறைமுகமாக பாஜகவால் சூறையாடப்படுவதாக உணர்ந்த நிதிஷ்குமார் தற்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்டால் ஆட்சியமைக்க ஆதரவு தரத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடது சாரிகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தரப்பிலிருந்து ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க நேரம் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நிதிஷ் குமாரை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டு, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஆதரவு கடிதத்தை அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் பிகாரில் பாஜகவுடன் கூட்டணி முறிந்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சியைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிகளுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதிஷ் குமார் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.