சென்னை: தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் இன்று மாலை ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ சிகிச்சைப் பெற்றார். பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தனது சொந்த ஊருக்குச் சென்று ஓய்வெடுத்தார். அங்கிருந்து நேற்று மாலை சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று தனது ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்தைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி வழக்குகள் தொடர்ந்துள்ளார். அதேபோல், அதிமுகவின் வங்கிக்கணக்குகளை முடக்க கோரி ரிசர்வ் வங்கிக்கு கடிதம், கட்சி சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு, சட்டப்பேரவையில் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பேரவைத் தலைவருக்கு கடிதம் என்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்ற வழக்குகள், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சேலம், கிருஷ்ணகிரி, வேலூர்,ராணிப்பேட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.