மிகச் சாதாரணமாய் கேட்டுவிட்டாய் நண்பா, ‘உனக்கென்ன அக்காவா… தங்கையா? கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித்தர, ஒரே பையன்’ என்று. எனில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து கல்யாணம் பண்ணித்தர மட்டுமா அக்காவும் தங்கையும்? என அணிலாடும் முன்றிலில் நா. முத்துகுமார் அக்கா தங்கை இல்லாத உறவின் வலியை அழகாக உணர்த்தியிருப்பார். இல்லாதவர்களுக்கே வலி புரியும், மதிப்பு தெரியும்.
இந்நிலையில், தனக்கு வாழ்நாள் முழுவதும் அக்கா, தங்கையின் பாசம் கிடைக்காது போய்விடுமோ என மும்பையை சேர்ந்த ஒருவர் வருந்தியுள்ளார். ரக்ஷா பந்தன் அன்று கையில் ராக்கி கட்டி விடவும், அடம்பிடித்து பரிசு பொருள்களை வாங்கிக் கொள்ளவும் தங்கை இல்லாததை நினைத்துக் கவலைப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் வரவிருக்கும் 2 வாரங்களுக்கு முன்பே, டின்டெர் (tinder) என்ற ஆன்லைன் டேட்டிங் ஆப்பில், ரக்ஷா பந்தனின்போது வெளியே செல்ல தங்கைகள் தேவை என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவருக்கு இரண்டு தங்கைகள் கிடைத்துள்ளனர். இந்த வருடம் இவர்கள் மூன்று பேரும் ரக்ஷா பந்தனை சேர்ந்து கொண்டாட உள்ளதாகக் குறிப்பிட்டு, டின்டெர் ஆப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவை, ரெட்டிட் வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில், டேட்டிங் ஆப்பில் தங்கைகளைத் தேடிக் கண்டுபிடித்த அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்துள்ளன.