ஐதராபாத்: தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு எச்.ஐ.வி நோயாளியின் ரத்தம் கொடுத்த ரத்த வங்கி மீது தெலங்கானா போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று வயது ஆண் குழந்தைக்கு (தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்) கடந்த இரண்டரை ஆண்டுகளாக அடிக்மேட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் ரத்த வங்கியின் மூலம் அவ்வப்போது ரத்தம் ெசலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்படும். அதன்படி கடந்த ஜூலை 20ம் தேதி குழந்தைக்கு ரத்தம் கொடுக்கப்பட்டது. அதன்பின் குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரத்தவங்கியின் அலட்சியத்தால் தங்களது குழந்தைக்கு எய்ட்ஸ் நோயாளிகளை தாக்கும் எச்.ஐ.வி வைரஸ் உடையவரின் ரத்தம் கொடுக்கப்பட்டதாக நல்லகுண்டா போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து ேபாலீசார் சம்பந்தப்பட்ட ரத்த வங்கியிடம் விசாரணை நடத்தினர். ரத்த தானம் வழங்குவோரிடம் இருந்து ரத்தத்தை சேகரிக்கும் முன், அவர்களது உடலில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த பல சோதனைகள் செய்வதாக ரத்த வங்கி நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர். இருந்தும் போலீசார் மேற்கண்ட ரத்த வங்கியின் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.