புதுடெல்லி: பிரதமர் அலுவலக இணையதளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது
பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ.26.13 லட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.2,23,82,504-ஆக உள்ளது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த 2002-ம் ஆண்டு வீட்டு மனை ஒன்றை, நான்கு பேருடன் சேர்ந்து வாங்கினார். அதில் இவரது பங்கு 25 சதவீதம். ரூ.1.1 கோடி மதிப்பிலான அந்த இடத்தை பிரதமர் மோடி தானமாக அளித்துவிட்டார். அதனால் அவரிடம் தற்போது அசையா சொத்துகள் எதுவும் சொந்தமாக இல்லை.
பிரதமரிடம் ரொக்கம் ரூ.35,250 உள்ளது. அவர் தபால் அலுவலகத்தில் வைத்துள்ள தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் மதிப்பு ரூ.9,05,105. அவர் வைத்திருக்கும் ஆயுள் காப்பீடுகளின் மதிப்பு ரூ.1,89,305.
இதேபோல் மத்திய அமைச்சர்கள் சிலரும் தங்கள் சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ரூ.2.54 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.2.97 கோடி மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன. மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ஆர்.கே.சிங், ஹர்தீப் சிங் பூரி, பர்சோத்தம் ரூபாலா மற்றும் ஜி.கிஷன் ரெட்டி ஆகியோரும் தங்களின் கடந்த நிதியாண்டு சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர்.