சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஆக.10) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நேற்று (ஆக.9) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் பவானியில்22 செ.மீ., அவலாஞ்சியில் 19 செ.மீ., கூடலூர் பஜாரில் 17 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாறில் 12 செ.மீ., சின்னக்கல்லாரில் 11 செ.மீ., வால்பாறையில் 10 செ.மீ.மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.