சென்னை: தமிழகத்தில் இயங்காமல் உள்ளசர்க்கரை ஆலைகளை இயக்க குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வேளாண் துறைஅமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 12 இணை மின்திட்டங்களில் 6 முடிவுற்ற நிலையில், மீதமுள்ள 6 திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உயர் அதிகாரிகள், கட்டுமான பணிநிறுவனர் வால்சந்த் மற்றும் ஆலோசகர் மிட்கான் நிறுவனத்தினருடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
எதிர்வரும் 2022-23 அரவைப் பருவத்திலேயே முதலாவதாக, எம்.ஆர்.கே, கள்ளக்குறிச்சி-1 மற்றும் கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இணைமின்உற்பத்தியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், மீதமுள்ள சுப்ரமணிய சிவா, சேலம் மற்றும் நேஷனல் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் அடுத்த ஆண்டுஅரவை பருவத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும் அவர் பேசும்போது கூறியதாவது: கரும்பு ஆலைகளில் மாதாந்திரக் கூட்டங்கள் மற்றும் கோட்டஅலுவலகங்களில் வாராந்திரக் கூட்டங்கள் நடத்த வேண்டும். ஆலைகளில் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தி சர்க்கரைஉற்பத்தி செலவை குறைக்கும் வகையில், சர்க்கரை கட்டுமானம் அதிகம் பெறக்கூடிய மாதங்களில் அதிக கரும்பு அரவை செய்யவேண்டும்.
எத்தனால் மற்றும் இணை மின்உற்பத்தி மூலம் ஆலைகளை லாபகரமாக இயக்கும் வகையில்ஆலையின் முழு அரவைத் திறனுக்கு ஏற்ப கரும்பு உற்பத்தியைப் பெருக்க உரிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும்.
அரசு வழிவகைக் கடன் விரைவில் வழங்கப்பட்டு கரும்பு நிலுவைத்தொகை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயங்காமல்உள்ள சர்க்கரை ஆலைகளை இயக்க அரசால் குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் சர்க்கரை துறைஆணையர் ஹர்மந்தர் சிங், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, கூடுதல் ஆணையர் அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரும்பு ஆலைகளில் மாதாந்திரக் கூட்டங்கள், கோட்ட அலுவலகங்களில் வாராந்திரக் கூட்டம் நடத்த வேண்டும். சர்க்கரை கட்டுமானம் அதிகம் பெறக்கூடிய மாதங்களில் அதிக கரும்பு அரவை செய்ய வேண்டும்.