இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான ஏலம் வெளிப்படையாகவும், நன்கு திட்டமிடப்பட்டும் செயல்படுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது.
2ஜி, 3ஜி, 4ஜி தொழில்நுட்ப சேவையைத் தொடர்ந்து 5ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரவுள்ளது. இணையசேவையின் வேகத்தை பன்மடங்கு கூட்டுவது மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி என வரவிருக்கும் உலகத்துக்கு தேவையான வேகம் அளிக்க 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் பங்கேற்கவில்லை.
மொத்தம் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) விற்பனைக்கு தயாராக இருந்தது. இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. 7 நாட்களாக நடைபெற்ற ஏலத்தில் 51,236 மெகாஹெர்ட்ஸ் மட்டும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு விற்பனையானதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த ஏலம் தெளிவான முறையிலும், வெளிப்படைத் தன்மையுடனும், மிகுந்த தொழில்முறையுடனும் நடத்தப்பட்டது. ஏலத்தை நடத்துவதற்குத் தேவையான கட்டாய முன்நிபந்தனைகளும் கடைபிடிக்கப்பட்டன என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு நடவடிக்கை
இதுபோன்ற மிகப்பெரிய 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் வெற்றிக்கு விரிவான திட்டமிடல் மற்றும் முன் தயாரிப்புகள் தேவை. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. முதலாவதாக, மலிவு விலையில் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியாவுக்கு ஏற்ற அலைகளை அடையாளம் காணும் பணிநடைபெற்றது. இரண்டாவதாக, இந்த ஸ்பெக்ட்ரம்பேண்டுகளை (ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பட்டை) பாதுகாப்பு மற்றும் ஏஜென்சிகளிடமிருந்து மறுசீரமைத்தல் பணிகளைச் செய்வதாகும். இதனால் போதுமான அளவு ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாவதாக, வணிக மற்றும் அரசு நிறுவனங்களிடையே இந்த ஸ்பெக்ட்ரம் பேண்ட்களின் ஒருங்கிணைப்பு விதிகளை வரையறுப்பதாகும். எனவே இந்த அலைக்கற்றை ஏலத்தை கடைபிடிப்பதற்கான முன் தயாரிப்புப் பணிகளுக்கு இரண்டு முதல் 3 ஆண்டுகள் பிடித்தது.
மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் ஏர்வேவ்ஸ் எனப்படும் அலைக்கற்றை வெளியிடப்பட்டது. மேலும், இது பெரும்பாலும் 5ஜி பேண்டுகளில் விற்பனைக்கு வழங்கப்பட்டது.
அடுத்ததாக, ஏலத்தை எடுக்கும் நிறுவனங்கள் நிதி ரீதியாக இத்தகைய மெகா ஏலத்தில் பங்கேற்கும் வகையில் தொழில் துறையை தயார்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த சீர்திருத்தப் பணி கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது. இந்த சீர்திருத்தங்கள் ஏற்கெனவே அதிக கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழில் துறையின் பணப்புழக்க நிலைமையை சரி செய்யும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டன.
இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஏலத்தின் கட்டண விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியது. ஏலத்தை எடுக்கும் நிறுவனங்கள் முழு ஏலத் தொகையையும் எளிதான வருடாந்திர தவணைகளில் செலுத்துவதற்கான விருப்பத்தை அனுமதிப்பதன் மூலம் இது செய்யப்பட்டது. மேலும், இந்த ஏலத்தில் விற்கப்படும் அலைக்கற்றைக்கான ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்களையும் (எஸ்யுசி) அரசு ஒழித்தது. இந்த எஸ்யுசி கட்டணம் என்பது ஏலத்தை எடுக்கும் ஆபரேட்டர்களின் ஆண்டு வருவாயின் சதவீதத்தைக் கொண்டு செலுத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஏலத்தில் எடுக்கும் நிறுவனங்களின் நிதி நிலைமைகளை பெரிதும் எளிதாக்கியுள்ளன.
இந்த ஏலத்துக்கு மட்டுமல்லாமல் 5ஜி நெட்வொர்க்குகளில் வலுவான முதலீடுகளைச் செய்வதற்கும் அவர்களை நன்றாக தயார் செய்ய மத்திய அரசின் இந்த சீர்திருத்தம் உதவியது. இந்த முன்தயாரிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் ஏலத்தை நிறைவு செய்வதற்கு மத்திய தொலைத் தொடர்பு துறைக்கு மூன்றரை மாதங்கள் மட்டுமே தேவைப்பட்டன.
5ஜி ஏலம் ஒரு நியாயமான வெற்றியாகக் கருதப்பட்டாலும், இதை மேம்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. முதலாவதாக, அனைத்து இந்திய ஆபரேட்டர்களும் தங்களது அனைத்து 5ஜி பேண்டுகளிலும் (குறைந்த, நடுநிலை, அதிக அதிர்வெண்) அலைக்கற்றைகளில் தங்கள் உலகளாவிய சக நிறுவனங்களுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே முதலாவது சவாலாகும்.
தொடர்பில் இல்லாதோரையும் தொடர்புபடுத்தும்
மேலே உள்ள சீர்திருத்தங்களைக் கொண்டுவரும்போது ஏல விலைகளை மேலும் குறைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். இதன்மூலம் அனைத்து 5ஜி பேண்டுகளிலும் அதிகஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை ஆபரேட்டர்கள் கைப்பற்ற முடியும். இது சந்தைப் போட்டித் தன்மையைப் பாதுகாக்கும். மேலும், இந்தியாவில் 5ஜி இணைப்பின் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்தவும் உதவும். அப்போதுதான் அந்த்யோதயாவின் தேசிய நோக்கம்,சேவை செய்யப்படாதவர்களுக்கு சேவை செய்வது மற்றும் தொடர்பில்லாதவர்களை இணைப்பது ஆகியவை நிறைவேறும். சேவை வழங்கப்படாத இடங்களுக்கு சேவை வழங்கவும், தொடர்பில் இல்லாதோரையும் தொடர்புபடுத்தும் திட்டமும் நிறைவேறும்.
மொத்தத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் தெளிவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நன்கு திட்டமிடப்பட்டும் செயல்படுத்தப்பட்டது என்பது கண்கூடு.
(பிஸினஸ்லைன் இதழிலிருந்து…)
கட்டுரையாளர்:
துணைத் தலைவர், அரசு விவகாரங்கள், குவால்காம், இந்தியா மற்றும் தெற்கு ஆசியா