மதுரை: நாட்டின் 48-வது ஜிஎஸ்டி கூட்டம் ஆகஸ்ட் 4-வது வாரத்தில் மதுரையில் நடைபெற இருக்கிறது. இதனால், தேசிய அளவில் மதுரை கவனம் பெறத் தொடங்கி உள்ளது. 2017-ம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.
மாநில அரசுகள் ஜிஎஸ்டியில் கூறும் குறைபாடுகள், ஆலோசனைகளைப் பற்றி விவாதித்து சீர்திருத்தம் செய்ய நாட்டின் முக்கிய நகரங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தற்போது வரை 47 ஜிஎஸ்டி கூட்டங்கள் நடந்துள்ளன. சண்டிகரில் நடந்த கடைசிக் கூட்டத்தில் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்து அறிவித்தது.
இந்தக் கூட்டத்தை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த முடிவான நிலையில் தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட், அதைத் தொடர்ந்து நடைபெறும் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தள்ளிப்போனது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில நாட்களுக்கு முன், மதுரையில் ஜிஎஸ்டி கூட்டம் ஆக.4-வது வாரம் நடைபெறும் என கூறியிருந்தார். இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதித் துறைச் செயலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
ஜிஎஸ்டி அறிமுகமாகி இதுவரை 47 கூட்டங்கள் நடந்த நிலையில் இந்தக் கூட்டம் முதல்முறையாக தமிழகத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி கூட்டங்கள் பெரும்பாலும் மாநிலத் தலைநகரங்கள், பெரிய நகரங்களில் மட்டுமே நடந்துள்ளன.
தற்போதுதான் முதல்முறையாக மாநிலத் தலைநகரைத் தாண்டி மதுரையில் முக்கியத்துவம் வாய்ந்த ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனால்,தேசிய அளவில் மதுரை கவனம் பெறத் தொடங்கி உள்ளது.
ஜிஎஸ்டி தொடர்பாக பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வந்த தென் தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள், இந்தக் கூட்டம் மதுரையில் நடைபெறுவதால் தற்போதே அதில் விவாதிக்க வேண்டிய அம்சங்களைப் பற்றி தமிழக அரசுக்கும், நிதி அமைச்சருக்கும் மனுக்களை வழங்கி வருகின்றனர்.
சமீபத்தில் இந்தக் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டிய விவகாரங்கள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறைச் செயலர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
நாட்டின் முக்கிய நிதித்துறை ஆலோசனைக் கூட்டம் மட்டுமில்லாது அந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில மக்கள் பிரதிநிதிகள் வர இருப்பதால் மதுரையின் முக்கியச் சாலைகள், சுகாதார வசதிகளை மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேம்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.