சென்னை: அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு காலக்கெடு நிர்ணயித்து தலைமைச் செயலர் சமீபத்தில் அரசாணை வெளியிட்ட நிலையில், விசாரணையில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என ஓய்வூதியர் சங்கம் கோரியுள்ளது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ச.ராமமூர்த்தி தலைமையில் கரூரில் கடந்த ஜூலை 5-ம் தேதி நடந்தது.
இக்கூட்டத்துக்கு பிறகு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பேசிய மாநில தலைவர் ச.ராமமூர்த்தி, ‘‘ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் நடைபெறும் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்து, அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்கள் மீதான புகார்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இந்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் ஜூலை 6-ம் தேதி வெளியான நிலையில், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு கடந்த ஆக.4-ல் அரசாணை வெளியிட்டார். அதில் கூறியுள்ளதாவது:
அரசு அதிகாரிகள், தங்களின் கீழ் பணியாற்றுவோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கும்போது, கவனத்துடன், சுய கட்டுப்பாட்டுடன் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநீக்க நடவடிக்கையில் முடிவு எடுக்கும்போது அவசரம் கூடாது.
இடைநீக்கம் செய்யப்பட்டால் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும். ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையை அரசிடம் ஓராண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் அடிப்படையில், தேவைப்பட்டால் இடைநீக்கத்தை தொடரலாம். குற்றவியல் நடவடிக்கை தொடர்பான வழக்குகளுக்கு இது பொருந்தாது. தொடர் இடைநீக்கம் தேவைப்படாது என்று கருதினால், அதை திரும்ப பெறலாம்.
ஓராண்டுக்குள் விசாரணையை முடித்து, ஊழல் தடுப்பு இயக்ககத்தில் அறிக்கை தரவேண்டும். அறிக்கை கிடைத்ததும் 4 மாதங்களுக்குள் இறுதி உத்தரவைதுறைத் தலைவர் செயல்படுத்தவேண்டும். இந்த வழிகாட்டுதலைஅனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும். இதில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தலைவர் ச.ராமமூர்த்தி கூறும்போது, ‘‘இந்த உத்தரவுகள் பணியாளர் நலத் துறையில் பலகாலமாக இருந்தாலும், யாரும் பின்பற்றுவது இல்லை. தற்போது ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக, தலைமைச் செயலர் மீண்டும் அந்த அரசாணையை பிறப்பித்துள்ளார்.
இதை வரவேற்கிறோம். ஆனால், இதுபோன்றநடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. அதிகாரிகள் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட பணியாளருக்கு அதுபற்றிய விவரம் புரிவது இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வுக்கூட்டம் நடத்தினால் சங்கங்கள் தரப்பு நியாயங்களை சொல்ல முடியும்’’ என்றார்.