பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பாஜக கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தான் அவாம் கட்சி 4, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றின. தேர்தலுக்குப் பிறகு விகாஸ் ஷீல் இன்சான் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்த கட்சியின் பலம் 77 ஆக உயர்ந்தது.
எதிரணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர். ஒரு தொகுதி இடைத்தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் பலம் 80 ஆக உயர்ந்தது.
முதல்வர் நிதிஷ் ராஜினாமா
ஜே.டி.யு. பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று காலை நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.
இதன் பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற நிதிஷ் குமார், ஆளுநர் பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
லாலு வீட்டில் ஆலோசனை
அங்கிருந்து நேரடியாக பாட்னாவில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு நிதிஷ் சென்றார். அங்கு லாலுவின் மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நிதிஷ் குமார் வீட்டுக்கு சென்றனர். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மெகா கூட்டணியின் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து புதியகூட்டணி அரசை அமைக்க உரிமை கோரினர். தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலையும் அளித்தனர். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
இன்று மாலை 4 மணிக்கு புதிய கூட்டணி அரசு பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.
ஆளுநரை சந்தித்த பிறகு நிதிஷ் நிருபர்களிடம் கூறும்போது, “7 கட்சிகள், ஒரு சுயேச்சை எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். எங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
ஆர்ஜேடி மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறும்போது, “பிஹாரின் நலன் கருதி திருப்புமுனை முடிவை எடுத்த நிதிஷ் குமாரை பாராட்டுகிறேன். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் அறிவிக்கப்படுவாரா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை” என்று தெரிவித்தார்.
புதிய கூட்டணிக்கு 164 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் அந்த பட்டியலை ஆளுநரிடம் அளித்திருப்பதாகவும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் விஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.