நம்பிக்கை துரோகம் பாஜகவுக்கு பழக்கமில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். பிஹார் அரசியலில் புதிய திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கைகோத்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் அரசியல் முறையை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் புகழ்வது போல் இகழ்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக எப்போதும் மக்களை வஞ்சிப்பதில்லை. நம்பிக்கை துரோகம் பாஜகவுக்கு பழக்கமில்லை. பிற கட்சிகளில் இருந்து எம்எல்ஏ.,க்களை இழுப்பதெல்லாம் கட்சிபிறழ்பவர்களின் நலனுக்காக மட்டுமே. அதுபோல், பிற கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்துவதும் கூட அந்தக் கட்சியை தூய்மைப்படுத்தும் முயற்சியே. மாநில அரசுகளை நிலைகுலையச் செய்வதும் கூட அந்த மாநிலங்களில் நிர்வாகத்தை சீர் செய்யவே” என்று பதிவிட்டுள்ளார். வஞ்சப்புகழ்ச்சி நிறைந்த இந்த ட்வீட்டுக்கு பலரும் பின்னூட்டங்களை பதிவு செய்து வருகின்றனர்.
கூட்டணி முறிவு ஏன்? கடந்த 2020-ம் ஆண்டு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. பாஜக கூட்டணியில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தான் அவாம் கட்சி 4, விகாஸ் ஷீல் இன்சான் கட்சி 4 இடங்களைக் கைப்பற்றின. தேர்தலுக்குப் பிறகு விகாஸ் ஷீல் இன்சான் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் அந்த கட்சியின் பலம் 77 ஆக உயர்ந்தது.
எதிரணியில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்ட் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றன. தனித்துப் போட்டியிட்ட ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தலுக்குப் பிறகு ஒவைசியின் 4 எம்.எல்.ஏ.க்கள், ஆர்.ஜே.டி.யில் இணைந்தனர். ஒரு தொகுதி இடைத்தேர்தலில் ஆர்ஜேடி வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் பலம் 80 ஆக உயர்ந்தது.
ஜே.டி.யு. பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு ஜே.டி.யு. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “பாஜக நமது கட்சியை அவமதித்துவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க முயற்சி செய்தது. எனவே பாஜக உடனான கூட்டணியை முறிக்கிறோம். முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அறிவித்தார்.