காரைக்குடி அருக செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு நடந்து வரும் நிலையில், உடான் திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செட்டிநாடு அரசு கால்நடை பண்ணை 1,907 ஏக்கரில் அமைந் துள்ளது. இந்த பண்ணை வளாகத்தில் இரண்டாம் உலகப்போரின்போது 1944-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 2 விமான ஓடுதளங்கள் உள்ளன. அவை தற்போது வரை பெரிய அளவில் சேதமடையாமல் காணப்படுகின்றன. காரைக்குடி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளும் தொழிலதிபர்களும், பணி காரணமாக வெளிநாடு செல் வோரும் அதிகளவில் வசிக்கின்றனர்.
மேலும் காரைக்குடி, செட்டிநாடு, பிள்ளையார்பட்டி உள்ளிட்டவை சுற்றுலாத்தலமாக இருப்பதால் அதிகளவில் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆத்தங்குடி டைல்ஸ், புவிசார் குறியீடு பெற்ற கண்டாங்கி சேலை, அரியக்குடி குத்து விளக்குகள், செட்டிநாடு கலைப் பொருட்கள் ஆகியவை உலக பிரசித்தி பெற்றவை. அவற்றை வாங்குவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வணிகர்கள் வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் அடிக்கடி திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்புகளும் நடக்கின்றன.
இதனால் திரைத்துறையினரும் அதிகளவில் வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது மதுரை, திருச்சி விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காரைக்குடி பகுதியில் விமான சேவை அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது.
ஏற்கெனவே ‘உடான்’ திட்டத்தில் செட்டிநாட்டில் உள்நாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் இந்திய விமான சேவை கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தற்போது அதே பகுதியில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடான் திட்டத்தில் உள்நாடு விமான நிலையம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமிதிராவிடமணி கூறியதாவது: கடந்த மாதம் இந்திய விமான சேவை கழக அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தினர் முதற்கட்டமாக விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கால்நடை பண்ணையில் இருந்து நிலத்தை பெயர் மாற்றம் செய்யும் பணி நடந்து வருவதாக கூறுகின்றனர். விமானிகள் பயிற்சி மையத்தோடு உடான் திட்டத்தில் உள்நாட்டு விமான சேவையும் தொடங்க வேண்டும், என்றார்.