கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவி ஒருவர் பேராசிரியையாக பணியாற்றிய வந்தார். இப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேராசிரியையின் புகைப்படங்களை பார்த்தனர். அதுவும் பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதனை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் ஆன்லைனில் பார்த்துக்கொண்டிருந்த போது மாணவரின் பெற்றோர் அதனை பார்த்துவிட்டனர். பேராசிரியை பிகினி உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது குறித்து அம்மாணவரின் பெற்றோர் எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழகத்தில் புகார் செய்தனர். அதில் “தங்களின் மகன் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு கற்றுக்கொடுக்கும் பேராசிரியையின் புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தோம். அந்த புகைப்படங்கள் ஆபாசமாகவும், ஆட்சேபகரமாகவும், உள்ளாடை தெரியும் வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. அது போன்ற படங்களை எனது மகன் பார்க்கக்கூடாது என்பதற்காக நான் முயற்சி செய்கிறேன். ஆனால் பேராசிரியையே இது போன்று படங்களை பதிவிட்டுள்ளார்” என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்புகாரின் அடிப்படையில் பேராசிரியை ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவர் முன்பாக மாணவரின் பெற்றோர் கொடுத்த புகார் கடிதம் வாசித்துக்காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பணியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பேராசிரியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டு தன்னுடைய தனிப்பட்ட புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அதனை பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து பேராசிரியை தன்னுடைய பணியை ராஜினாமா செய்தார். அதோடு விடாமல் பல்கலைக்கழகத்திற்கு களங்கத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தியதற்காக ரூ.99 கோடி கொடுக்கவேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட பேராசிரியைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முடிந்து போன பிரச்னையை மீண்டும் கையில் எடுத்திருப்பதாக பேராசிரியை குற்றம் சாட்டியுள்ளார். பேராசிரியையின் புகைப்படங்கள் அவர் பணியில் சேருவதற்கு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.