பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.
நிதிஷின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து பாஜக உயர் நிலைக் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்று அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதன்பிறகு பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
தேசிய அரசியலில் ஈடுபட நிதிஷ் குமார் ஆசைப்படுகிறார். வரும் 2024-ம் ஆண்டில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட அவர் தீவிர முயற்சி செய்து வருகிறார். இதன்காரணமாக பாஜக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறுவார் என்பது முன்கூட்டியே தெரியும். அவரை யாரும் தடுக்கவில்லை. நிதிஷ் குமார் துரோகம் இழைத்துள்ளார். அடிக்கடி கூட்டணி மாறுவதால் நம்பகத்தன்மையை இழந்துள்ளார். இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.