பீகாரில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்த ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இன்று மாலை மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவுக்கு பின்னடைவு
கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் முதலமைச்சரானார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால், 2017இல் திடீரென பாஜக கூட்டணிக்கு நிதிஷ் குமார் மாறினார். நிதிஷ் குமாருக்கு ஆதரவளித்து அவரது முதல்வர் நாற்காலியை பாஜக பாதுகாத்தது. 2020ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வரான அவர், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் பாஜகவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற பெரிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியில் இருந்து வெளியேறியது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் தங்களது கட்சியை உடைக்க பார்ப்பதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் குற்றம் சாட்டி வருவது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மீது மாநில கட்சிகள் இதுபோன்று குற்றஞ்சாட்டுவது இது முதல் முறை அல்ல என்றாலும், பீகார் மாநிலத்தில் ஆட்சியை தங்கள் வசம் பாஜகவால் கொண்டு வர முடியாதது கவனம் ஈர்த்துள்ளது.
அண்மையில், மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திய பாஜக, ஆட்சி அதிகாரத்தை பிடித்தது. இதனை வைத்து, ஏக்நாத் ஷிண்டேக்கள் உருவாக்கப்படுவார்கள் என பாஜக ஆளாத மாநிலத்தில் அக்கட்சியினர் மார்தட்டி வந்தனர். அதற்கு பேரிடியாக பீகார் மாநில சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர்தான் பீகார் மாநிலத்தில் 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா தந்த பாடம்
மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் ஆட்சியமைப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தன. சுழற்சி முறையில் ஆட்சியை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட அதிகார பகிர்வு மோதலால் தேர்தலுக்கு முந்தைய பாஜக-சிவசேனா கூட்டணி உடைந்தது. இதையடுத்து, கங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியமைத்தது. அதன் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர முதல்வராக பொறுப்பேற்றார். இதனை சுட்டிக்காட்டி, “லாலுவுடன் கைகோர்ப்பாரா நிதிஷ்குமார்? மகாராஷ்டிராவை நினைவுபடுத்தும் பிகார் தேர்தல் முடிவுகள்!” என்ற தலைப்பில் அப்போதே சமயம் தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
லாலுவுடன் கைகோர்ப்பாரா நிதிஷ்குமார்? மகாராஷ்டிராவை நினைவுபடுத்தும் பிகார் தேர்தல் முடிவுகள்!
ஆனால், மாகாராஷ்டிர மாநில சம்பவங்கள் கொடுத்த அடியின் பலனாக, பீகாரில் நிதிஷ் குமாரே முதல்வராக இருக்க பாஜக சம்மதித்தது. இருந்தபோதிலும், இரண்டே ஆண்டுகளே பீகாரில் ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்கும் தங்களது சித்து விளையாட்டுகளை பாஜக காட்ட அரம்பித்ததுதான் இன்றைய அரசியல் பரபரப்புகளுக்கு காரணம்.
பீகாரில் கோட்டை விட என்ன காரணம்
மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிகம் என்பதால், ஏக்நாத் ஷிண்டேவை உருவாக்கி ஆட்சியை பிடித்து விட்டது. ஆனால், பீகாரில் நிலைமை வேறு. அங்கு பாஜகவை விட அதிக எம்.எல்.ஏ.க்களை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி கொண்டுள்ளது. மேலும், கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் உள்ளன. இதனால், வலுவாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நிதிஷ் குமாருக்கு ஆதரவளிக்க முன்வந்தது, பாஜகவுக்கு பின்னடைவு. அத்துடன், நிதிஷ் குமார் வேகமாக சுதாரித்துக் கொண்டதும், பாஜகவுக்கு நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தியதும் ஒரு காரணம். மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கிறது; அணுசரனையாக செல்லலாம் என்றில்லாமல், கட்சியை உடைக்க திட்டமிடுவது தெரிந்ததுமே, உடனடியாக நிதிஷ் குமார் செயலாற்றி விட்டார். இல்லையென்றால், கடந்த தேர்தலில் கிடைத்த 43 தொகுதிகளும் அடுத்த தேர்தலில் கிடைக்காமல் போயிருக்கும். கட்சியும் அவர் கையை விட்டு போயிருக்கும்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை
முக்கியமாக, ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவின் விட்டுக் கொடுக்கும் மனம் குறிப்பிடத்தக்கது. பீகார் மாநிலத்தில் எதிரும்புதிருமாக இருக்கும் ஆர்ஜேடி – ஜேடியு ஆகிய கட்சிகள் 2015 தேர்தலில் கூட்டணி அமைக்க முக்கிய காரணமே பாஜக எதிர்ப்பு மனநிலைதான். அந்த தேர்தலுக்கு பின்னரும் கூட, நிதிஷ் குமார்தான் கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். தற்போது, நிதிஷ் குமார் மீண்டும் வந்ததும் அவரை அரவணைத்து ஆட்சியை தக்கவைக்க உதவி புரிந்துள்ளனர். குறிப்பாக, லாலுவின் ஆர்ஜேடி கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கும் போதும், நிதிஷ் குமாரையே முதல்வராக தொடரவும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தேஜஸ்வி யாதவின் பரந்த மனப்பான்மையையை காண முடிகிறது. அத்துடன், நிதிஷ் குமார் முதல்வராக தொடர்ந்து ஆட்சி அதிகாரம் அவரது கையில் இருக்கும் பட்சத்தில், அவரது கட்சியும் அவரது கையை விட்டு செல்லாமல் இருக்கும். பீகார் மாநில அரசியல் ஆர்ஜேடி – பாஜக என்று மாறி வரும் சூழலில் ஐக்கிய ஜனதாதளக் கட்சியினர், ஆர்ஜேடிக்கோ, பாஜகவுக்கோ செல்லாமல் இருக்க இது வழிவகுக்கும்.