பாட்னா: பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கூட்டணி முறிந்தது. அந்த மாநில முதல்வர் நிதிஷ்குமார் நேற்று பதவியை ராஜினாமா செய்தார். ஜேடியு, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட 7 கட்சிகளின் கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. முதல்வராக நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் லோக் ஜன சக்தியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது: குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிதிஷ் குமாரை அறிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்த்தது. அவ்வாறு நடக்காததால் அந்த கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.
கடந்த 2017-ல் ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறினார். இப்போது பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இருமுறை மக்களின் தீர்ப்புக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். நிதிஷ் குமாரும், கம்சனும் ஒரே குணம் உடையவர்கள். தேவகியின் குழந்தைகளை கம்சன் கொலை செய்தார். இதேபோல ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரை நிதிஷ் குமார் ஓரம் கட்டினார். பிஹாரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்து, பொதுத்தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.