ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வயதான தம்பதிக்கு ஐவிஎஃப் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. 54 ஆண்டுக்கு பின் குழந்தை பிறந்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் – அரியானா எல்லை பகுதியான ஜுன்ஜுனு மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் கோபி சிங் (75). இவரது மனைவி சந்திர தேவி (70). தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பல மருத்துவமனைகளில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தங்களது உறவினர் மூலம் ஆல்வாவில் உள்ள மருத்துவமனைக்கு ஆலோசனைக்கு சென்றனர். அங்கு ஐவிஎப் முறையில் கர்ப்பம் தரிக்க சந்திரதேக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து அவர் கர்ப்பமானார். வயதாகிவிட்டதால் குழந்தை பெறுவதில் அவருக்கு கொஞ்சம் பயம் இருந்தது. ஆனாலும் குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை சந்திரதேவிக்கு இருந்தது. இந்நிலையில் ஆரோக்கியமான குழந்தையை அவர் பெற்றெடுத்தார். கிட்டதட்ட 54 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்ததை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஏற்கனவே ஒன்றிய அரசின் சட்ட விதிகளின்படி 50 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளுக்கு ஐவிஎஃப் முறையில் கர்ப்பம் தரிக்கும் சிகிச்சை அளிக்கக் கூடாது என்று கடந்த ஜூன் மாதம் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே ஐவிஎஃப் மூலம் சிகிச்சை செய்து வந்ததால், எந்த பிரச்னையுமின்றி மருத்துவமனை நிர்வாகத்தினர் சந்திரதேவிக்கு குழந்தை பேறு பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.