உறக்கத்தை விரும்புபவரா நீங்கள்…? வேலை, வீடு என எந்த இடத்திலும் தூக்கம் உங்களை தொற்றிக்கொண்டு கூடவே வருகிறதா..? `தூங்குமூஞ்சி’, `கும்பகர்ணன்’ என்ற பட்டப்பெயர்கள்தான் மிஞ்சியதா… அட விடுங்க! `தூங்குறது எள்ளளவு கஷ்டம் தெரியுமா’ என வடிவேல் பாணியில் கேளுங்கள்…
ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு செய்திதான் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நியூயார்க்கை சேர்ந்த காஸ்பர் (casper) என்ற மெத்தை நிறுவனம் ஒன்று, உறங்குவதற்கு வேலையும் கொடுத்து, பணமும் கொடுப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் முக்கிய விதியே உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு தூங்க வேண்டும், எங்கு வேண்டுமானாலும் தூங்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான்.
என்னது, தூங்குவதற்கு பணமா என ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த அலுவலகத்திற்கு நீங்கள் பைஜாமா அணிந்து கொண்டு வந்து தூங்க வேண்டும். அது தான் உங்கள் வேலை..
இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, தூங்குவதில் வல்லவர்கள் என நிரூபிக்க அவர்களின் அனுபவங்களை டிக் டாக் ஸ்டைலில் உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறுவனத்தின் தயாரிப்புகள் வழங்கப்படுவதோடு, பகுதி நேர வேலையும் அளிக்கப்படும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மட்டுமே அவகாசம்.
என்ன ஆரம்பிக்கலாங்களா…. ?