புதுடெல்லி: மதுராவைச் சேர்ந்த தேவ்கிநந்தன் தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய அளவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சி என 5 சமுதாயத்தினரைத்தான் சிறுபான்மையினர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ள மாநிலங்களில், அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து கிடைக்கவில்லை. எனவே, சிறுபான்மையினர் குறித்து விளக்கம் அளிக்கவும், மாவட்ட அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டுதல்களை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு கடந்த ஜூலை 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த வாதத்துக்கு ஏதேனும் உறுதியான முன்மாதிரியை தாக்கல் செய்தால்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த மனு நீதிபதிகள் யுயு லலித் மற்றும் எஸ்ஆர் பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ”சிறுபான்மையினரை மாவட்ட அளவில் அடையாளம் காண வழிகாட்டுதல்களை உருவாக்க கோரும் மனு சட்டத்துக்கு முரணாக உள்ளது. எனவே, மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கும் விஷயத்தில் பொது உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது” என்றனர்.