“பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்கள்” – ஆளுநர் தமிழிசை யோசனை

புதுச்சேரி: “பனை விதைகள் வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித் தரும், பனையை கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்பது கவலைக்குரியது” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, புதுச்சேரி வனத்துறை மற்றும் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சமூக அமைப்பு இணைந்து, ரோட்டரி சங்கத்தின் உதவியோடு 75 ஆயிரம் பனைவிதை நடும் “வன மகோத்சவ் 2022” விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பூரணாங்குப்பம் புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், வனக்காப்பாளர் சத்தியமூர்த்தி, துணை வனக்காப்பாளர் வஞ்சுள வள்ளி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வேளாண் அறிவியல் கல்லூரியின் தலைவர் கணேஷ், புதுச்சேரி ரோட்டரி சங்கத் தலைவர் சாமி, தனசுந்தராம்பாள் சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது: “பனை விதை வருங்காலத்தில் மிகப்பெரிய பொருளாதாரத்தை ஈட்டித் தரும். இயற்கையைப் பாதுகாக்கும்.

பனை என்பது கற்பக தரு. அதிலுள்ள பதநீர், பனங்கிழங்கு, பனம்பழம், ஓலைகள், பனைமரப் பொருட்களில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக சொல்கிறார்கள். பனைமரப் பொருட்களில் சாப்பிட்டு வந்தால் உடல் வலுபெறும், நோய் தொற்று ஏற்படாது என்றும் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட பனை அழிந்து கொண்டே போகிறது. அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. பனை ஒருமுறை நட்டால் போதும், அதுவாகவே நீரை எடுத்து வளரும். தினமும் அதனை கவனிக்க வேண்டியது இருக்காது.

பனையை கவனிக்காமல் விட்டுவிட்டோம் என்பது கவலைக்குரியது. சிங்கப்பூரில் பதப்படுத்தப்பட்ட நுங்குவை டப்பாவில் வைத்து, நல்லருசியான பழம், அதிக விலையுடையது என்று சொல்லி எல்லோரும் ஆசையுடன் வாங்கிக்கொண்டு சென்றார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பே சிங்கப்பூரில் பனை பற்றிய நன்மைகளை தெரிந்துகொண்டு விற்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் நாம் பனையை பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். பனை ஓலை, பனை பெட்டியைக் கூட பரிசு கொடுத்தனர். பனை ஓலை பெட்டியில் உணவு கொடுத்தார்கள்.

அப்படி பலன் தரக்கூடிய பனையை விட்டுவிட்டு செயற்கையாக போய்க் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் இல்லாத புதுச்சேரியை நாம் உருவாக்கப் போகிறோம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பனைப் பொருட்களைப் பயன்படுத்த முடியும். அதனால் பனையை விதைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்று ஆளுநர் தமிழிசை கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.