மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் | பாஜக, சிவசேனாவின் 18 பேர் பதவியேற்பு – சிறப்பாக பணியாற்ற பிரதமர் வாழ்த்து

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் பாஜக, சிவசேனா ஆகிய கட்சியிலிருந்து தலா 9 பேர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

சிவசேனா கட்சியில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து, பாஜக.வுடன் கூட்டு சேர்ந்து கடந்த ஜூன் மாதம் ஆட்சி அமைத்தனர். முதல்வராக ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும் பதவியேற்றனர்.

இதையடுத்து, அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியது. இது தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பல முறை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் உட்பட பலரை சந்தித்துப் பேசினார். அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக நீண்ட தாமதம் ஏற்பட்டதால் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கின.

இந்நிலையில், புதிய அரசு பதவியேற்று 41 நாட்களுக்கு பிறகு, பாஜக, சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலா 9 பேர் நேற்று அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பாஜக.வில் இணைந்த விகே பாட்டீல் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

மகாராஷ்டிராவில் அமைச்சர்களாக பதவியேற்ற 18 பேருக்கும் பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். “சிறந்தஅனுபவமும், நல்ல நிர்வாகத்தையும் அளிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட குழு மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் மாநில மக்களுக்கு சேவையாற்ற எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.

3 அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் இணைந்துள்ள சஞ்சய் ரத்தோட், விஜய்குமார் காவிட், அப்துல் சத்தார் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சஞ்சய் ரத்தோட் உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். புனேவில் பெண் ஒருவரின் மரணத்தில் இவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவர் தனது பதவியை கடந்தாண்டு ராஜினாமா செய்தார். தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்து அமைச்சராகியுள்ளார். இவர் குற்றமற்றவர் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டதால், அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். ஆனால் சஞ்சய் ரத்தோடுக்கு எதிரான போராட்டத்தை நீதிமன்றத்தில் தொடர்வேன் என மாநில பாஜக துணைத் தலைவர் சித்ரா வாஹ் கூறியுள்ளார்.

அதேபோல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அப்துல் சத்தார் மீது ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு பட்டியலில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 7,880 பேரில், அப்துல் சத்தாரின் 3 மகள் மற்றும் ஒரு மகனின் பெயர் இடம் பெற்றுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் விஜய்குமார் காவிட், கடந்த 2004-2009-ம் ஆண்டில் பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. அப்போது இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பின் பாஜகவில் இணைந்து கடந்த 2014-2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஒரு பெண் கூட இல்லை

மகாராஷ்டிர அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் 18 பேருடன் அமைச்சரவை எண்ணிக்கை 20-ஆக உள்ளது. இதில் ஒருவர் கூட பெண் இல்லை. இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே கூறும்போது, “பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், மாநில அமைச்சரவையில் ஒரு பெண்கூட இடம் பெறவில்லை. இது பாஜகவின் மனநிலையை காட்டுகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.