பீகாரில் பாஜக அடுத்த ப்ளான்? விழப்போகும் விக்கெட்டுகள் எத்தனை!

பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி உடைந்துள்ளது. இதையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள் அடங்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகியுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தோஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் செயல்பட்டு வருவதாகவும், நிதிஷ் குமாருக்கு வலது கரமாக திகழ்ந்த ஆர்.பி.சிங்கை வைத்து ஆட்சியையும், கட்சியையும் உடைக்க பாஜக திட்டமிடுவதாகவும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், “அதிக இடங்கள் எங்களிடம் இருந்தும் நிதிஷை நாங்கள் முதல்வராக்கினோம். அவருடைய கட்சியை உடைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. துரோகம் செய்தவர்களின் கட்சியைத்தான் நாங்கள் உடைத்தோம். மகாராஷ்டிராவில் சிவசேனா எங்களுக்கு துரோகம் இழைத்தது, அதற்கான விளைவுகளை அக்கட்சி சந்திக்கிறது.” என்று பாஜவை சேர்ந்த பீகார் முன்னாள் துணை முதல்வரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் முதலமைச்சரான நிதிஷ்குமார் 2017இல் திடீரென பாஜக கூட்டணிக்கு மாறினார். 2020ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு முதல்வரான அவர், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் பாஜகவை கழற்றி விட்டு மீண்டும் மெகா கூட்டணியில் இணைந்துள்ளார்.

பீகாரில் பாஜகவுடன் நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது, நீண்டகாலமாக அம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஆதரவு அளித்து வந்த பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பீகாரில் பாஜகவின் எதிர்காலம் பெரிதாக ஒன்றும் தேய்ந்து போய்விடவில்லை என்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.

பீகாரை பொறுத்தவரை நிதிஷ் குமாருடன் போட்டியிடும் வலுவான தலைவர் பாஜகவுக்கு இல்லை என்பதே அங்கிருக்கும் முக்கிய பிரச்சினை. பட்டிதொட்டியெங்கும் பாஜகவுக்கு நிர்வாகிகள் இருந்தாலும், மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் போன்ற புத்திசாலித்தனமான தலைவரோ, மேற்குவங்கத்தில் சுவேந்து அதிகாரி போன்று போராட்டக்குணமிக்க தலைவரோ பீகாரில் பாஜகவுக்கு இல்லை.

நிதிஷ் குமார் போன்ற உயர்ந்த அரசியல் ஆளுமையின் கீழ், பாஜக தனக்கான தலைவரை பீகாரில் வளர்க்க தவறி விட்டதாக வளரும் சமூகங்கள் பற்றிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக தனது நிலைப்பாட்டில் இருந்து, தனக்கான தலைவரை வளர்க்கும் சுதந்திரம் அக்கட்சிக்கு தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

“2024 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் இருந்து வெளியேறியது குறுகியகால பின்னடைவாக இருந்தாலும், பீகாரில் வலுவாக காலூன்றும் பாஜகவின் நீண்ட கால லட்சியங்களுக்கு அது உதவி புரிய வாய்ப்புள்ளது. கூட்டணியில் இருப்பது தங்களது வளர்ச்சிக்கு உதவாது என்பதை பாஜக தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.” என்றும் பேராசிரியர் சஞ்சய் குமார் கூறுகிறார்.

பாஜகவுக்கு இருக்கும் மற்றொரு முக்கிய பிரச்சினை ஆட்சி மீது இயல்பாகவே மக்களுக்கு எழும் அதிருப்தி. 2017இல் நிதிஷ் குமாருக்கு ஆதரவளித்து, 2020 தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது முதல் தற்போது வரை சுமார் 5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் பாஜக பங்கு பெற்றுள்ளது. ஆனால், ஆட்சிக்கு எதிரான மனநிலையை பாஜக ஏற்க முன்வராது எனவும், அதனை அப்படியே ஐக்கிய ஜனதாதளத்தின் மீது அக்கட்சி திணிக்கும் எனவும் அம்மாநில அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அண்மையில், பீகார் மாநிலத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா ஆகியோர் சென்ற போது, கள நிலவரத்தை அறிந்து கொள்ளும் விஷயம் கட்சி நிர்வாகிகளிடையே விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, 200 தொகுதிகளில் கள நிலவரத்தை அறிந்து கொள்ள பாஜக எடுத்த முடிவை சுட்டிக்காட்டி அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

இந்த கருத்தை ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவருமான அஜய் அலோக்கும் ஒப்புக் கொள்கிறார். “கூட்டணி முறிவுக்காக பாஜக வருத்தப்பட வேண்டாம், அதற்கு பதிலாக பீகாரில் லட்டுகளை அக்கட்சி விநியோகிக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கத்தின் தோல்விக்கு இப்போது பாஜகவை குறை சொல்ல முடியாது.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம், பாஜக vs மற்றவர்கள் என்ற நிலையை பீகாரில் அக்கட்சி உருவாக்கியுள்ளது. இது அக்கட்சிக்கு கிடைத்த குறிப்பிடத்தகுந்த வெற்றி. பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்கும் போது, அந்த கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் அப்படியே பாஜகவுக்கு விழ வாய்ப்புள்ளது. அதாவது, ஆர்ஜேடிக்கு எதிரான வாக்குகள், ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிரான வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் என அனைத்தும் எதிரே ஒற்றையாளாக இருக்கும் பாஜகவுக்கு செல்ல வாய்ப்பு அதிகம். அத்துடன், எதிரணியில் ஒற்றை ஆளாக களத்தில் பாஜக இருப்பது இயல்பாகவே அக்கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும். இது பாஜகவுக்கு பிளஸ்.

கட்சியை பாஜக உடைத்து விடும் என்ற அச்சத்தில் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியுள்ளார். ஆனால், பாஜகவுக்கு இன்னும் நேரம் அதிகமாகவே உள்ளது. அதன் கையில் மத்திய அரசின் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் உள்ளன. இன்றிலிருந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தாலும், ஐக்கிய ஜனதாதளம் மட்டுமின்றி, இதர கட்சிகளில் இருந்தும் விக்கெட்டுகளை அதனால் வீழ்த்த முடியும். மேலும், கூட்டணியை விரும்பாத அதிருப்தியில் இருக்கும் பலரையும் பாஜக தூக்க வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.