இந்தி பேசும் மாநிலங்களில் முதன்முறையாக மோடிக்கு எதிரான வியூகம்: 2024 தேர்தலில் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளரா?..எதிர்கட்சிகளின் பீகார் 2.0 பார்முலா வெற்றியால் பாஜக கலக்கம்

புதுடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் பல ஆண்டுக்கு பின்னர் மோடிக்கு எதிரான வியூகம் பீகாரில் வெற்றி பெற்றதால், எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளாராக நிதிஷ் குமார் நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் உறவை முறித்துக் கொண்டது. பல ஆண்டாக நீடித்த உறவு தற்போது முடிவுக்கு வந்ததால் எதிர்கட்சிகளின் வியூகங்கள் பலித்து வருகின்றன. நேற்று பீகாரில் நடந்த அதிரடி திருப்பங்களால், அம்மாநில எதிர்கட்சிகளுடன் இணைந்து முதல்வராக இருந்த நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிரான புதிய ஆட்சியை அமைக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக பாஜக அல்லாத கூட்டணி அரசு அமைகிறது. எதிர்கட்சிகளின் இந்த வியூகம் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அதனால் பீகார் 2.0 பார்முலாவின் வெற்றியானது, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். எதிர்கட்சிகளின் வரிசையில் பிரதமர் பதவிக்கான பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரின் பெயர்கள் அடிக்கடி பேசப்படும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் நிதிஷ்குமாரின் ெபயரும் சேர்க்கப்பட்டுள்ளது. காரணம், அவர் பாஜகவுக்கு கொடுத்த ‘ஷாக்’கால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேலும் சில கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறுகையில், ‘நாட்டின் ஆளுமை தலைவர்களை மதிப்பிட்டால், அந்த பட்டியலில் நிதிஷ் குமாரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. நிதிஷ் குமார் பிரதமராகத் தகுதியானவர். அதற்காகன நாங்கள் எந்த உரிமையும் கோரவில்லை. ஆனால் அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. 2024 மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார் எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக இருப்பாரா? என்பதற்கு தற்போது பதில் அளிக்க முடியாது’ என்று கூறினார். மேலும் சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‘நிதிஷ் குமாரின் அரசியல் பயணத்தை பார்க்கும்போது ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாக இல்லை. ஆனால், அவர் தனது அரசியல் ஆதாயங்களுக்காக பல முறை கூட்டணிகளை மாற்றியுள்ளார். அடிக்கடி தனது மனதை மாற்றிக் கொள்பவராக உள்ளார். நம்பிக்கை என்பது அவருக்கு எதிரானது. உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது பாஜகவுக்கு எதிராக உறுதியாக இருந்தார். எதிர்க்கட்சியில் பல திறமையான தலைவர்கள் உள்ளனர். 2024ல் நடக்கும் தேர்தலின் நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதை பின்னர் பார்ப்போம்’ என்றார்.பீகாரில் நடந்த அரசியல் மாற்றங்கள் குறித்து இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளரா? என்ற கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதே விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் மஜித் மேமன் கூறுகையில், ‘2024ல் நடக்கும் தேர்தலின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் பிரதமர் வேட்பாளராகப் பார்க்கப்படும்பட்சத்தில், அந்த பட்டியலில் நிதிஷ் குமாரும் இணைக்கப்படலாம். ஆனால் பாஜகவுக்கு சவால்விடும் வகையில் ஒருமித்த கருத்துள்ள தலைவர் தேவை’ என்றார். ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து சமீபத்தில் விலகிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆர்சிபி சிங் கூறுகையில், ‘பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏழு பிறவி எடுக்கலாம்; ஆனால் அவர் ஒருபோதும் பிரதமராக முடியாது’ என்றார். பாஜகவின் ராஜ்யசபா எம்பி விவேக் தாக்கூர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியேறியதுதான் எங்களுக்கு விடுதலை. அவரின் ஆசைக்கு எல்லையே இல்லை. பீகாருக்காகவோ அல்லது தனது கட்சிக்காகவோ அவர் உழைக்கவில்லை; தனது லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே உழைக்கிறார். இருப்பினும், பிரதமர் பதவி காலியாக இல்லை’ என்றார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ஜா கூறுகையில், ‘2024 தேர்தலின் போது மம்தா பானர்ஜியை விட, ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ் குமார் இருப்பார்’ என்று கூறினார். இவ்வாறாக பெரும்பாலான எதிர்கட்சிகளின் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.