கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.
எனவே, மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது பெரும் போராட்டமாக உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் வாகனங்களுக்கும், பள்ளிக்கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதனால் பள்ளி அமைந்துள்ள கனியாமூர் பகுதியே கலவரமயமானது.
இந்த வன்முறை தொடர்பாக, 300க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதே சமயம் மாணவி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று, உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்த நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதே சமயம் மாணவி மரணம் தொடர்பாக பள்ளித் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும் செயலாளருமான சாந்தி, பள்ளி முதல்வர் சிவ சங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும் தனது மகள் சாவில் மர்மம் இல்லை எனவும், திட்டமிட்ட கொலை என்றும் மானவியின் தாய் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் இறந்த மாணவியின் தாய் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நியாயம் கேட்க போவதாக அறிவித்து இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலை பொறுத்தவரை முதல்வர் பதவியை இழந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற ஒரே ஒரு அடையாளத்துடன் எடப்பாடி பழனிசாமி வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இந்த சூழலில் கட்சியில் இருந்தே நீக்கி விட்டதாக ஓபிஎஸ் தனது பங்குக்கு அறிவித்து சட்டப்போராட்டத்தை தொடங்கிவிட்டார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது ஊழல் செய்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனால் தனது நிலைமையே தகராறில் இருக்க தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கோர்ட்டில் வாதாடி பெற்றுக்கொள்ளவும் எடப்பாடி பழனிச்சாமி போராடிக்கொண்டு இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி ஒரு காலி பெருங்காய டப்பா என தெரியாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் தனது மகள் சாவுக்கு நியாயம் கேட்க போவதாக கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நியாயமான முறையில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில் போலீசாரின் மீது நம்பகத்தன்மை இல்லையா? என்றும் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.