இந்தியாவின் 49-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானார் யு.யு.லலித்! – யார் இவர்… பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதியோடு முடிகிறது. அதையடுத்து, அடுத்த புதிய தலைமை நீதிபதியை தேர்ந்தெடுக்கும் விதமாக என்.வி.ரமணா, தலைமை நீதிபதி என்ற முறையில் தனக்கு அடுத்த இடத்திலிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித்-ஐ, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில், இந்தியாவின் 49-வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித், அதிகாரப்பூர்வமாக இன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நீதிபதி உதய் உமேஷ் லலித் – நீதிபதி என்.வி ரமணா

யார் இந்த உதய் உமேஷ் லலித்!?

யு.யு.லலித் என அழைக்கப்படும் உதய் உமேஷ் லலித், மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவராவார். இவரின் தந்தை யு.ஆர்.லலித், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். மும்பை அரசு சட்டக் கல்லூரியில் படித்த யு.யு.லலித், 1983-ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். பின்னர் 1986 ஜனவரியில் டெல்லிக்குக் குடிபெயர்ந்த யு.யு.லலித், 1986 முதல் 1992 வரை மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான சோலி சொராப்ஜியுடன் இணைந்து பணியாற்றினார். அதைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞராக பணியாற்றிவந்த இவர், 2014-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியானார்.

உதய் உமேஷ் லலித்

நீதிபதியாக அல்லாமல் வழக்கறிஞராகப் பல முக்கிய வழக்குகளில் இவர் ஆஜராகியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று பாபர் மசூதி வழக்கு. இந்த வழக்கில் பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்குக்கு ஆதரவாக இவர் ஆஜரானார். இதன்காரணமாக அயோத்தி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து லலித் விலக நேரிட்டது. மேலும் மற்றுமொரு வழக்காக, குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் வழக்கில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக, லலித் ஆஜரானார். மேலும், 2ஜி வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ-யின் சிறப்பு அரசு வழக்கறிஞராக, 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இவரை நியமித்திருந்தது.

உதய் உமேஷ் லலித்

இவற்றோடு நீதிபதியாக பல சிறப்புமிக்க தீர்ப்புகளையும் இவர் வழங்கியிருக்கிறார். 2017-ல், முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக்கை சட்டவிரோதம் எனக் கூறி உத்தரவிட்ட, 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் ஒருவர். மேலும், ‘தோலுடன் தோல் தொடர்பு கொண்டால்’ மட்டுமே அது பாலியல் வன்முறை என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்ததும், லலித் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுதான். இப்படி பல்வேறு முக்கிய வழக்குகளில் வழக்கறிஞராகவும், நீதிபதியகவும் பங்காற்றியிருக்கும் லலித், தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்திருக்கிறார். மேலும், இவரின் பதவிக்காலமும் நவம்பர் 8-ம் தேதியோடு முடிவடைவதால், 74 நாள்களுக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.