தானே,
சுதந்திர தினத்தை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள பாட்சா அணை, தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி கடந்த ஜூலை 22-ந்தேதி ‘ஹர் கர் திரங்கா’ என்ற முன்னெடுப்பை தொடங்கினார். நாட்டு மக்களின் மனதில் தேசபக்தி உணர்வைத் தூண்டும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள பாட்சா அணை மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாட்சா அணை தேசிய கொடி வண்ணத்தில் ஒளிரும் வீடியோவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 4,24,000 க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு சுமார் 5,000 பேர் லைக் போட்டுள்ளனர்.