ஸ்ரீநகர்: காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்ற இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின் போது மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள தர்ஹால் ராணுவ முகாமில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங் கூறுகையில், “பார்கல் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியைத் தாண்ட சிலர் முயன்றனர். அவர்களை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். முன்னதாக அந்த தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர்.அதில், மூன்று வீரர்கள் வீர மரணமடைந்தனர். இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
சுதந்திர தின விழாவை குலைக்க சதி: ஜம்மு-காஷ்மீரின் பகல்காம் மாவட்டம், வோட்டர்ஹோல் பகுதியில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று சுற்றி வளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே பல மணி நேரம் சண்டை நீடித்தது.
இந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் காஷ்மீர் பண்டிட்டுகள் ராகுல் பட், அம்ரின் பட் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் ஆவர். சுட்டு வீழ்த்தப்பட தீவிரவாதிகள் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
வெடிகுண்டு பறிமுதல்: இதற்கிடையில், மற்றொரு ரகசிய தகவலின் அடிப்படையில் புல்வாமா மாவட்டத்தில் தகாப் கிராஸிங் என்ற இடத்தில் உள்ள சுற்றுச்சாலைக்கு அருகே தேடுதல் வேட்டை நடத்திய போது சுமார் 30 கிலோ எடையளவில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டம் முபாரக்பூரில் வசிக்கும் சபாவுதீன் ஆஸ்மி என்பவர் ஐஎஸ்ஐஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு படையினர் அவரை நேற்று கைது செய்தனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு: நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினம் விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.