கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டில் அதிகரித்துள்ள விலைவாசி, பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர்.
இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஒரு ட்வீட் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் கட்சியைக் குறிப்பிடாமல், “சிலர் ஆகஸ்ட் 5ஆம் தேதி பில்லி, சூனிய மந்திரத்தைப் பயன்படுத்தினர். ஆனால் அது எடுபடவில்லை. தங்கள் விரக்தியைப் போக்கிக் கொள்ள அவர்கள் கருப்புச் சட்டை அணிந்தனர். ஆனால் பில்லி, சூனியம், மூடநம்பிக்கைகளால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பில்லி, சூனியத்தால் மோசமான நாட்களுக்கு முடிவு கட்ட முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் அவர்களே, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பை சிதைக்கும் வேலையை நிறுத்துங்கள். நாட்டை தவறாக வழிநடத்தாதீர்கள். பிரச்சினைக்குரிய விஷயங்களில் நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்றார்.
முன்னதாக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷும் பிரதமருக்கு பதிலடி கொடுத்திருந்தார். அதில் அவர் கருப்புப் பணத்தைக் கொண்டுவர அவர்களுக்கு வழியில்லை. அதனால் கருப்பு ஆடைகளை வைத்து சர்ச்சை செய்கின்றனர். நாட்டில் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி பிரதமர் பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அந்த பொய் வாக்குறுதிகளை வீசுபவரோ எதுவும் சொல்லாமல் இருக்கிறார் என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தான் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமருக்கு ட்வீட் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5ல் கருப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் நடத்திய போராட்டம் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவின் இரண்டாவது ஆண்டு விழா என்பதாலேயே என்று பாஜகவினர் சிலர் விமர்சித்தனர்.