புதுடெல்லி: ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். இதன் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளதாகவும் வரும் நவம்பருக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும் எனவும் மக்களவையில் அரசு கடந்த வாரம் தெரிவித்தது.
இத்திட்டத்தின் தேசிய முக்கியவத்துவம் கருதி, கட்டுமானப் பணிக்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இத்திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் நேற்று கூறும்போது, “நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறுவதை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம்.
உட்புற அலங்காரம் மற்றும் தரை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட குஷன் கம்பளங்களும் மத்திய பிரதேசதம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வந்த விலை உயர்ந்த கற்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசியல் சாசன தினமான நவம்பர் 26-ம் தேதி, இந்தக் கட்டிடத்தின் சில பகுதிகள் செயல்பாட்டுக்கு வரலாம். என்றாலும் இதுகுறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.