இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில்; அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது. அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதே சுழலில் ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். சில ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் பிராமண பத்திரம் தாக்கல் செய்தது. பின்னர் இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி; இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல். ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம். இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது. இதை கொடுங்கள், இதை கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் அதை இந்தியா போன்ற நாட்டில் செயல்படுத்த முடியாது. அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதும் வழங்குவதும் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியது. இலவசங்களும், சமூக நலத்திட்டங்களும் வெவ்வெறானவை. ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் பின்னர் மாநில பொருளாதார நிலை என்ன என்பது பற்றி தெரியாது. மேலும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக தவறுகளை செய்யக் கூடாது. இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிக்கு பயன்படுத்தலாம். பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது. அரசு வழங்கும் இலவசங்கள் பல நேரத்தில் உயிர்காக்கும் அம்சங்களாக உள்ளன. இலவசங்களை வரைமுறைப்படுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறி, இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.