சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நடந்தது.
அண்மையில், போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாவட்ட தலைநகரங்களில் அமைச்சர்கள் தலைமையில் இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைப்போன்று தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.