- தாய்லாந்தில் தற்காலிகமாக குடியேறும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
- மனிதாபிமானத்தின் அடிப்படையில் தற்காலிக புகலிடம் வழங்கப்படுகிறது தாய்லாந்து பிரதமர் பிரயுத் அறிவிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நிரந்தர புகலிடம் கிடைக்கும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி தெரிவித்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் போராட்டம் வெடித்தது.
Reuters
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் அரசு அலுவலகங்கள் மற்றும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லம் ஆகியவை ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவு வழியாக கடந்த ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூருக்கு தப்பி சென்றார், மேலும் அதிலிருந்து ஒருநாள் கழித்து தனது ஜனாதிபதி பதவியையும் ராஜினாமா செய்தார்.
சிங்கப்பூர் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்சவிற்கு விசா காலம் வியாழக்கிழமை காலாவதியானதால் அவர் தாய்லாந்திற்கு செல்லலாம் என தகவல் வெளியாகி இருந்தன.
AFP
இந்தநிலையில், மனிதாபிமான காரணங்களுக்காக 73 வயதான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார் என அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அவர் இங்கு இருந்து நிரந்தர புகலிடம் அளிக்கும் மூன்றாவது நாட்டை தேடுவார் என தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா (Prayut Chan-o-cha)புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் இது மனிதாபிமானப் பிரச்சினை, ராஜபக்சவிற்கு இது தற்காலிக தங்குமிடம் என்று நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம். ஆனால் எந்த அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது, இது அவருக்கு தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் கண்டறிய உதவும் என்று பிரதமர் பிரயுத் கூறியதாக பாங்காக் போஸ்ட் செய்தித்தாள் தகவல் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ஸ்மார்ட் ஃபோன்கள் போன்ற அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் ஓரே சார்ஜர் போர்ட்: இந்திய அரசு அதிரடி!
பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை அதிபர் தாய்லாந்திற்கான ராஜதந்திர பாஸ்போர்ட் வைத்திருப்பதால் 90 நாட்கள் வரை தங்கலாம் என்று அந்தநாட்டின் வெளியுறவு அமைச்சர் டான் பிரமுத்வினாய் (Don Pramudwinai) தெரிவித்துள்ளார்.