திருமலை: கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசைலம் அணை நிரம்பி உள்ளது. இந்த காலநிலையில் முதன்முறையாக 10 மதகுகள் 10 அடி உயர்த்தப்பட்டு நாகார்ஜூனா சாகருக்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஸ்ரீசைலம் அணைக்கு ஜூராலாவில் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 558 கன அடி அளவிலும், சுங்கேசுலாவில் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 128 கன அடி அளவிலும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தற்போது ஸ்ரீசைலம் அணைக்கு 3 லட்சத்து 64 ஆயிரத்து 683 கன அடி வீதம் நீர் வரத்து உள்ளது. இதனால், 10 மதகுகள் திறக்கப்பட்டு 2 லட்சத்து 77 ஆயிரத்து 540 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரத்து 948 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆர்ப்பரித்து கொண்டு வெள்ளம் செல்கிறது. அணையின் முழு கொள்ளளவான 215 டிஎம்சி உள்ள நிலையில் தற்போது அணையில் 211.4759 டிஎம்சியாக உள்ளது. வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்று வட்டார கிராமமக்களை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.