ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் `ஜெயிலர்’ படத்தின் டெஸ்ட் ஷூட் நேற்று தொடங்கியது. விரைவில் அதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தோம்.
‘அண்ணாத்த’வுக்குப் பிறகு ரஜினியும் ‘பீஸ்ட்’டுக்குப் பிறகு நெல்சனும் மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ள படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யாகிருஷ்ணன், ‘தரமணி’ வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் தவிர, நெல்சனின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்கள் பலரும் கமிட்டாகியுள்ளனர். ஹீரோயினாக ஐஸ்வர்யா ராயிடம் பேசியுள்ளனர். படத்தில் தமன்னாவும் நடிக்க உள்ளதாகப் பேச்சு எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து விசாரித்ததில் தகவல் உறுதியாகவில்லை. நேற்று நடந்த டெஸ்ட் ஷூட்டில் ரம்யாகிருஷ்ணன் மற்றும் நெல்சனின் காமெடி டீமினர் பங்கேற்றதாகச் சொல்கிறார்கள். ‘படையப்பா’விற்குப் பிறகு ரஜினி – ரம்யாகிருஷ்ணன் காம்பினேஷன் இணைவதால் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
அனிருத் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவாளராக கமிட் ஆனார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ‘டாக்டர்’ கேமராமேன் விஜய் கார்த்திக் கண்ணன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். நேற்று நடந்த டெஸ்ட் ஷூட்டை அவர்தான் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஐதராபாத்தில் சினிமா ஸ்டிரைக் நடந்துவருவதால், சென்னையில்தான் முதல் இரண்டு ஷெட்யூல்கள் நடக்கவுள்ளன. பனையூரில் உள்ள தனியார் ஸ்டூடியோவிலும், பூந்தமல்லி அருகே உள்ள ஸ்டூடியோவிலும் செட்கள் அமைத்துவருகின்றனர். வருகிற 22-ம் தேதி பூந்தமல்லியில் நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்கிறார். இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள். ‘அண்ணாத்த’ சரியாகப் போகாததால், ரஜினி தன் சம்பளத்தைக் கணிசமாகக் குறைத்து வாங்கியிருக்கிறார் எனவும் சொல்கிறார்கள்.
வருகிற 22-ம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றாலும், அதற்கு முன்னரே மற்ற நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகளை ஷூட் செய்யவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதற்குள் ஐஸ்வர்யா ராய் படத்திற்குள் வந்துவிடுவார் என்றும் சொல்கிறார்கள்.