ஒரே ஆண்டில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்வால், டீ, காபி, பால் சார்ந்த பொருள்களின் விற்பனை விலை உயர்வதை தடுக்க முடியாது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி அளித்துள்ள பேட்டியில், “சீனிவாச நிறுவனம் பால் விலையை ஏற்கனவே உயர்த்தியுள்ள நிலையில், ஹட்சன் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும் நாளை முதல் உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
2022-ல் மூன்றாவது முறையாக தனியார் பால் விலை உயர்கிறது. விற்பனை விலை உயர்வுக்கு உணவுப் பொருள்கள் விலை உயர்வதாக சொல்லி தனியார் நிறுவனங்கள் பொய்யான காரணத்தை கூறி வருகின்றனர். தனியார் பால் விலை 2020-ல் இருமுறை உயர்ந்தது. கொரானா ஊரடங்கு நாளில் கொள்முதல் விலையை ரூ.20 வரை குறைத்தனர். அதன்பிறகு தற்போது வரை கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.
தற்போது கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 29 முதல் ரூ. 30 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக அரசு, தனியார் பால் விலை உயர்வை கண்டுகொள்வதில்லை. தனியார் பால் விலையை முறைப்படுத்த தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் ஊழலை சுட்டிக்காட்டினால் நாங்கள் தனியார் பால் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக பொய்யான குற்றச்சாட்டை ஆவினில் இருக்கும் ஊழல்வாதிகள் சிலர் கூறுகின்றனர். இதற்கு கால்நடை மருத்துவர்களை பயன்படுத்துகின்றனர்.
ஆவினில் பாலின் தரத்தை கண்காணிப்பதற்காக வாங்கப்பட்ட இயந்திரம் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. பேருந்து, ஆட்டோ கட்டணத்தை தீர்மானிப்பது போல் பால் விலையையும் தீர்மானிக்க வேண்டும். தீவன விலை கடும் உயர்வால் கால்நடை வளர்ப்போர் மாடுகளை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றனர். ஆவினில் Milk Compressor இயந்திரங்கள் கொள்முதலில் ரூ. 2 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. ஆவின் கால்நடை மருத்துவர்கள், பால் குளிர்விப்பு நிலையம் போன்றவற்றில் அமைச்சர்களுக்கு பணம் பெற்றுத்தரும் வேலையைத்தான் செய்கின்றனர்.
ஆவின் நிர்வாகம் சீர்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. கடந்த 2014-ல் ஆவின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 10 ஜெயலலிதா உயர்த்தியதை வரவேற்றோம். அதில் 8 ரூபாய் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்தது. ஆவின் பால் கொள்முதல் விலையை 2019-ல் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தினார் எடப்பாடி. அதன்பிறகு விலை உயர்வு வழங்கப்படவில்லை.
லிட்டருக்கு ரூ.10 வரை கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும். மத்திய அரசின் ஜிஎஸ்டியை காரணம் காட்டி 40 சதவீதம் வரை பால்பொருள் சார்ந்த விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்துவது தவறு. எங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் பேரணி நடத்தி, சட்ட ரீதியாகவும் போராடுவோம். தற்போது தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வதால் டீ, காபி, பால் சார்ந்த பொருள்களின் விற்பனை விலை உயர்வதை தடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM